சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்து 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி: தஞ்சாவூர் அருகே சோகம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நேற்று காலை சமயபுரம் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் சரக்கு வேன் புகுந்ததில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். ஆடிமாத பிறப்பையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 65 பேர், திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இவர்கள் நேற்று காலை 6.15 மணி அளவில் பத்து பத்து பேர் குழுவாக தஞ்சாவூர் மாவட்டம் வலம்பக்குடி கிராமத்தில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து அரிசி லோடு ஏற்றி வந்த சரக்கு வேன், தஞ்சை குடோனில் இறக்கி விட்டு மீண்டும் காலை 6.40 மணியளவில் கரூர் சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்தது. இதில், கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த முத்துசாமி (60), மீனா(26), ராணி (37), மோகனாம்பாள்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் படுகாயடைந்த தனலட்சுமி(28), சங்கீதா (30) ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி இறந்தார். சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த எஸ்பி ஆஷிஷ்ராவத், டிஎஸ்பிக்கள் நித்யா, ராமதாஸ் மற்றும் செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கரூரை சேர்ந்த வேன் டிரைவர் சவுந்தரராஜனை(38) கைது செய்தனர். சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பேர் விபத்தில் பலியானதால் கண்ணுக்குடிபட்டிகிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
* பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27) மற்றும் மீனா (26) ஆகிய 4 நபர்கள் சம்பவ இடத்திலேயும், தனலட்சுமி (36) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயும் உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். விபத்தில், காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சங்கீதாவுக்கு சிறப்பு சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.