*நெல்லையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
நெல்லை : வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றி நீக்கம் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என நெல்லையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் அலுவலகத்தில் வனத்துறையின் பணிகள் தொடர்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட வன அலுவலர்களுடன் அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுதான் சி குப்தா. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மாரிமுத்து, சூழலியல் மேம்பாட்டு அலுவலர் அன்பு, நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவட் ராமன், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாத், சமூக காடுகள் கோட்ட மாவட்ட வன அலுவலர் இளங்கோ, களக்காடு முண்டந்துறை துணை இயக்குனர் ராமேஸ்வரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாஞ்சோலை தொடர்பான விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. மணிமுத்தாறு பகுதியில் பல்லுயிர் பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும். அதற்காக தான் வனத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்படுகிறது. சூழல் சுற்றுலா உள்ளிட்ட நெல்லை மாவட்டத்திற்கு வனத்துறையின் திட்டங்கள் கொண்டு வருவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். தென்காசி மாவட்டத்திற்கு தனி மாவட்ட வன அலுவலர் நியமனம் செய்வதற்கான கோப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
வனத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பது வனத்துறையின் கடமையாகும். அதன் அடிப்படையில் யானைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மாஞ்சோலை புலிகள் காப்பக பகுதியாக இருப்பதாலும், காப்புக் காடுகள் பட்டியலில் இருப்பதாலும் சூழல் சுற்றுலா அனுமதி வழங்குவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனக் குற்றங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சரை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப், மேயர் பொறுப்பு கே.ஆர்.ராஜு, கிறிஸ்தவ பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வ சூடாமணி, ஒன்றிய திமுக செயலாளர்கள் பாளை.
வடக்கு செயலாளர் வேலன்குளம் கண்ணன், மத்தி போர்வெல் கணேசன், களக்காடு செல்வ கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் தர்மன், மாநகர துணை செயலாளர் பிரபு பாண்டியன், மேலப்பாளையம் பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், கால்வாய் துரை பாண்டியன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.