ஸ்ரீ வைகுண்டம்: ஸ்ரீ வைகுண்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியினர் கருப்புக்கொடி காட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அங்கம் வகித்தனர். ஆனால் அந்த கூட்டணியில் தற்போது அதிமுக இணைந்த பிறகு ஓபிஎஸ் அணியினர் ஓரங்கட்டப்பட்டனர். சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த அமித்ஷா, பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஓபிஎஸ்சை சந்திக்க அவர்கள் மறுத்து விட்டனர். அதே நேரத்தில் திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து பேசினார். இதனால் ஓபிஎஸ் அணியினர் விரக்தியடைந்தனர். ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்ததற்கு எடப்பாடியின் அழுத்தம் தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, உரிய மரியாதை தராத தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவதாக அறிவித்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஸ்ரீ வைகுண்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அவரை வரவேற்க சாலையோரத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். பழைய தாலுகா அலுவலகம் அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழுவின் ஸ்ரீ வைகுண்டம் ஒன்றிய செயலர் செந்தில்பெருமாள், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளர் பார்வதி தலைமையில் திடீரென எடப்பாடி ஒழிக என கோஷமிட்டு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். துரோக அரசியலால் வலுவான இயக்கத்தை வலுவிழக்க செய்ததை கண்டித்தும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ஆகியவற்றை கண்டித்தும் பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.