Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகல்: புதிதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கம்

சென்னை: ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகியுள்ளனர். புதிதாக அவர்கள் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளனர். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, அவரது அணியில் முக்கிய நிர்வாகிகளாக முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரும், புகழேந்தியும் இருந்து வந்தனர். ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களாக ஜே.சி.டி.பிரபாகரும், புகழேந்தி வலம் வந்தனர். தற்போது அவர்கள் ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகியுள்ளனர்.

இதுதொடர்பாக ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் மனநிலையை அறிந்தபிறகே, ‘பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்’ என்ற கருத்தின்படி ‘அதிமுக ஒருங்கிணைப்புகுழு’ என்ற தூய பணியை தொடங்கியுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில், ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தில் இருந்து அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தோம்.

ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு என்று வைத்துவிட்டு, நாங்கள் ஒரு அணியின் நிர்வாகியாக இருப்பது எப்படி பொருத்தமாக இருக்க முடியும்? எனவே இந்த நிமிடத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்து விலகி கொள்கிறோம். எங்களது நோக்கம் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும், அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வளர்ந்த அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

கடந்த முறை தேனி தொகுதி கிடைத்தது. இந்தமுறை அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரை இந்துத்துவா தலைவி என்று பாஜக தலைவர்கள் சொல்லியிருக்க முடியுமா? எப்போது ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவி என்று சொன்னார்களோ, அப்போதே அதிமுக தோற்றுபோய்விட்டது. பன்னீர்செல்வத்துக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எப்போதுமே அவர் எங்களுக்கு அண்ணன்தான். ஆனால் அவர் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.

தேசிய கட்சிகள் 2வது இடத்துக்கு வருவதை அனுமதிக்கவே முடியாது. போராட வேண்டிய திமுகவை விடுத்து, பா.ஜனதாவை எதிர்க்கட்சியாக நினைத்து அதிமுகவினர் பேச தொடங்கிவிட்டார்கள். இதை எங்களால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டி கேட்டுக்கொள்வது இதைத்தான். தயவுசெய்து ஒற்றுமையாக போங்கப்பா. உள்ளே வேற கட்சியெல்லாம் வந்துடும் போல இருக்கு. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அனைவரும் ஒற்றுமையாக இருங்களேன் என்று செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எங்களிடம் சொல்கிறார்கள். அதிமுகவினர் ரத்த கண்ணீர் வடிக்காத குறையாக கெஞ்சுகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சேர்க்க முடியாது என்றெல்லாம் பேசுகிறார்கள். அது வேண்டாம். கொஞ்சம் கீழே இறங்கி வாருங்கள். தலைவராக யார் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் ஒற்றுமை வேண்டும். அதன் ஒருகட்டமாகவே இந்த ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டும் பணியில் நாங்கள் இறங்க போகிறோம். இனியும் தோல்விகளை தொண்டர்கள் தாங்கிக்கொள்ளவே முடியாது. நாடாளுமன்ற தேர்தல் அதிமுகவினருக்கு பேரிடியை தந்துள்ளது.

ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதே இந்த தேர்தல் நமக்கு கற்றுத்தந்திருக்கும் பாடம். தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்தோ, அவர்களை சார்ந்தோ அதிமுக செயல்படக் கூடாது. அதேவேளை எந்த குடும்பத்தின் பிடியிலும் கட்சி சென்றுவிடக் கூடாது. எனவே ஒற்றுமைக்காக விரைவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளோம். ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவையும் சந்தித்து பேசவுள்ளோம். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக அதிமுக உருவாக வேண்டும். எனவே தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் எங்களிடம் உங்கள் கருத்தை சொல்லலாம்.

மாவட்ட வாரியாக பயணித்தும் தொண்டர்களின் கருத்தை அறிந்து, அந்த கருத்துகளை தொகுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவிடம் பேசுவோம். பிரிந்து கிடக்கும் தலைவர்களை சந்தித்து கருத்துகளை சொல்ல இருக்கிறோம். ஒற்றுமை வேண்டி போராட்ட களத்துக்கும் செல்ல தயார். எடப்பாடி பழனிசாமி மனம் இறங்கி வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரை இந்துத்துவா தலைவி என்று பாஜக தலைவர்கள் சொல்லியிருக்க முடியுமா?