Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு: போஸ்டர்கள் கிழிப்பு

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘‘உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது.

அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார். இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறி கன்னட மக்களை கமல் அவமதித்து விட்டதாக கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா? பட நிகழ்ச்சிக்காக நீங்கள் எங்கள் மாநிலத்திலும் இருந்தீர்கள். உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம்.

அது நடக்கவில்லை. கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என எச்சரிக்கிறோம் என தெரிவித்தார். படத்தின் போஸ்டர் கர்நாடகாவில் ஒட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அவற்றை கன்னட அமைப்பினர் கிழித்து வருகிறார்கள். இதே போல் கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளார்.