Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு பயணம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை சந்தித்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்க 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22 அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் மாபெரும் ராணுவ நடவடிக்கையை மே 7ம் தேதி மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகள் மீது குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கவும், தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதை சர்வதேச சமூகத்தின் முன் அம்பலப்படுத்தவும் காங்கிரஸ் எம்.பி.சசி தரூர், திமுக எம்பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே, ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜ தலைவர்கள், முன்னாள் தூதர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய 7 குழுக்கள் 30க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன.

பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாட்டை வெற்றிகரமாக எடுத்துரைத்த இந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினரை, பிரதமர் மோடி நேற்று இரவு 7 மணிக்கு சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த ஆதரவு ஆகியவை குறித்து இந்த குழுவினர் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தார்கள்.