Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவியை கட்சியில் சேர்க்க மறுப்பு என்டிஏ கூட்டணியில் சேர்க்க சம்மதம்: அமித்ஷா-எடப்பாடி தனியாக 20 நிமிட சந்திப்பில் முக்கிய முடிவு

புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி ஆகியோரை கட்சியில் சேர்க்க முடியாது. அதேநேரத்தில் என்டிஏ கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, பாஜவுக்கு வழங்கும் சீட்டில் இருந்து அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியில் பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் முன் கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

குறிப்பாக ஆளும் கட்சியில் உள்ள கூட்டணிகள் கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதால் அவர்களும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவிலும், கூட்டணியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், அதே கோரிக்கையை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் எழுப்பினார்.

இதனால் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜகவின் டெல்லி தலைமை இருப்பதுபோன்ற ஒரு கருத்து நிலவியது. அதேநேரத்தில் தமிழக பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அண்ணாமலையும், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் எதிர்க்கட்சி முகாமில் கடும் குழப்பம் நிலவியது.

இந்தநிலையில்தான் துணை ஜனாதிபதியாக திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார். அவருக்கு வாழ்த்து சொல்வதுபோல, டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அமித்ஷாவுடன் முதலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இருந்தனர். பின்னர் கடைசியாக 20 நிமிடங்கள் மொழிபெயர்பாளர்கள் உதவியுடன் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மட்டும் பேச்சுவார்த்ைத நடத்தினர்.

இருவரின் சந்திப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். கிட்டத்தட்ட மிரட்டல் தொனியில் அமித்ஷா இதை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆரம்பத்தில் சற்று நிலைகுலைந்துபோன எடப்பாடி பழனிசாமி, அவர்களை கட்சியில் சேர்ப்பது இல்லை என்பதை பின்னர் தீர்மானமாக கூறிவிட்டாராம்.

பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை கட்சிக்குள் சேர்ந்தால் மீண்டும் குழப்பங்களை செய்வார்கள். தேவையில்லாமல் பிரச்னைகள் உருவாகும். கோஷ்டிகள் உருவாகும். கட்சியில் கட்டுப்பாடு இருக்காது. அதேநேரத்தில் டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். இரு நாட்களுக்கு முன்னர் கூட, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளார். அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனாலும் அமித்ஷாவின் மிரட்டல் தொனிக்கு பயந்து வேண்டும் என்றால், பாஜ கூட்டணிக்கு அதிக இடங்களை ஒதுக்குகிறேன். அந்த இடங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு சீட்டுகளை நீங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் முதல்வர் வேட்பாளராக என்னை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தி விட்டு சொல்கிறேன் என்று கூறிய அமித்ஷா, செங்கோட்டையன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், அண்ணாமலை தொடர்ந்து கூட்டணிக்கு எதிராகவும், பாஜவுக்கு எதிராகவும் செயல்படுவதாக அமித்ஷாவிடம் எடப்பாடி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அமித்ஷாவும், இது எங்கள் கட்சிப் பிரச்னை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். விரைவில் சென்னை வரும்போது மீண்டும் சந்தித்துப் பேசுவோம் என்று எடப்பாடியிடம் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தான் தெரிவித்த கோரிக்கையை எடப்பாடி முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், ஓரளவுக்கு சம்மதம் தெரிவித்ததால், பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும், பாதி தோல்வி, பாதி வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சொகுசு காரில் வந்த எடப்பாடி பழனிச்சாமி, நிருபர்களை சந்திக்காமல், முகத்தை மூடியபடி தமிழ்நாடு இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் நேற்று பிற்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். சென்னை விமானநிலையத்துக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்தார். வெளியில் வராமல், அப்படியே சேலத்திற்கு விமானத்தில் சென்றார்.

* ரூ.4 கோடி காரில் எடப்பாடி பழனிசாமி பாஷ்யம் நிறுவனர் பங்கேற்பு

அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, யுனோவா காரில் முன் சீட்டில் இருந்து சென்றார். அமித்ஷாவை சந்திக்க அவரது வீட்டுக்கு 8 மணிக்கு சென்றார். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பென்ட்லி காரில் பின் சீட்டில் அமர்ந்தபடி சென்றார். நிருபர்கள் அவரை படம் எடுக்காமல் இருக்க கர்சீப்பால் முகத்தை மூடியபடியே சென்றார். அவர் பயன்படுத்திய கார் டெல்லி பதிவு எண் கொண்டது. இந்த காரின் மதிப்பு மட்டும் ரூ.4 கோடி. கடந்த முறை அமித்ஷாவை சந்திக்க 3 காரில் மாறி மாறி சென்றார்.

திரும்பி வரும்போதும் இதே காரைத்தான் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், காரின் பின் சீட்டில் எடப்பாடி பழனிசாமியுடன், சென்னையில் பாஷ்யம் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தும் தொழிலதிபர் அபினேஷ் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இது அவருடைய நண்பர் கார் என்றும் கூறப்படுகிறது. அவர் அமித்ஷாவுக்கும் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா சந்திப்பில் தொழிலதிபர் அபினேஷ் கலந்து கொண்டதாகவும், அவர்தான் மொழிபெயர்ப்பாளராக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.