ஊட்டி : பலத்த காற்று காரணமாக ஊட்டி அருகே கொல்லிமலை ஒரநள்ளி துவக்க பள்ளி வகுப்பறை மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட கொல்லிமலை ஒரநள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஒரநள்ளி, செலவிப்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பொழிவு இருந்தது.
தற்போது சில நாட்களாக மழையின்றி பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் பலத்த காற்று காரணமாக இப்பள்ளியின் ஒரு வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. விடுமுறை காலம் என்பதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.எனவே பள்ளி துவங்குவதற்கு முன்பு பெயர்ந்து விழுந்த மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.