ஊட்டி : ஊட்டி - மசினகுடி சாலையில், கல்லட்டி மலை பாதையில் விபத்து நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் ரோலர் சேப்டி பேரியர் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான சாலைகளிலும், பள்ளத் தாக்குகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், பெரும்பாலான சாலைகள் அதிக கொண்டை ஊசி வளைவுகளையும், குறுகலாகவும் காணப்படும். குறிப்பாக ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலை கல்லட்டி மலை பாதை அமைந்துள்ளது.
இந்த சாலை செங்குத்தான மலையில் அமைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தின் போது ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இச்சாலையில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் செல்ல தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தபோதிலும், சில சமயங்களில் இந்த மலைப்பாதையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்கள் விழுவதை தடுக்கும் நோக்கில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இச்சாலையில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும், கல்லடிமலை பாதையில் பல இடங்களில் சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில், ரோலர் சேப்டி பேரியர் மூலம் சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கினாலும், அவைகள் பள்ளங்களில் விழாமல் இந்த தடுப்புகளில் மோதி மீண்டும் சாலையிலேயே நிற்கும் நிலை உள்ளது.
இதன் மூலம் பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று ஊட்டி - மசினகுடி சாலையில் மேலும் ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இந்த ரோலர் சேப்டி பேரியர் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.