*இம்மாதம் இறுதியில் துவங்க தோட்டக்கலைத்துறை திட்டம்
ஊட்டி : மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்கான மலர் நாற்று நடவு பணிகள், இம்மாதம் இறுதியில் ேமற்கொள்ள தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.
ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச்செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவை பார்ப்பதற்காகவே வருகின்றனர். இதுமட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சியின்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்படும்.
மலர் கண்காட்சி தினத்தன்று அந்த தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். மேலும், புல் மைதானங்களில் பல்வேறு வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். மேலும், பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் முதலே மலர்கள் மலர துவங்கிவிடும். அனைத்து மலர்செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்கும். உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பூக்கும் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகள் அனைத்திலும் பூக்கள் பூத்து குலுங்கும். இந்த மலர்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இந்த மலர் கண்காட்சிக்கு பல ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்படும் நிலையில், இவைகளின் வளர்ச்சி காலத்தை பொறுத்து விதை விதைக்கும் பணிகள் துவங்கும். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் விதைகள் சேகரிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விதைக்கும் பணிகள் துவக்கப்படும்.
கடந்த மாதம் விதைகள் விதைக்கும் பணிகள் முடிந்த நிலையில், 5 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளான பெகோனியா, ரெகன்கிளாசம், வால்சம், சோலியாஸ், லிசியந்தால், சால்வியா மற்றும் டெல்பீணம் ஆகிய வகைகளை சேர்ந்த மலர் நாற்றுக்கள் தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் நர்சரியில் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாற்றுகள் தயாரான நிலையில் இம்மாதம் இறுதி வாரத்தில் 6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகள் நாற்று நடவு பணி துவக்கப்படவுள்ளது.
இதற்காக, பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதவிர பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகள் சீரமைக்கப்பட்டு நாற்று நடவு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தோட்டகலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக டிசம்பர் மாதத்தில் நடவு பணிகள் துவங்கும். தொடர்ந்து படிப்படியாக மார்ச் மாதம் வரை நடவு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மலர்கள் பூக்கும் வகையில் அனைத்து மலர் செடிகளும் தயார் செய்யப்படும். 4 முதல் 6 மாதங்கள் வரை வளரும் மலர் செடிகளின் விதைகள் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறிய நாற்றுக்களாக வளர்ந்துள்ளன. மலர் தொட்டிகள் மற்றும் பாத்திகளில் நடவு செய்யும் பணிகள் இம்மாதம் இறுதி வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.


