நாமக்கல்: நாமக்கல்-சேலம் ரோடு பதிநகரை சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மோகனப்பிரியா (34). இவர்களது மகள் பிரினித்தி (6), மகன் பிரினிராஜ் (2). இந்த நிலையில் கடந்த 4ம் தேதி மதியம் வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பிரேம்ராஜின் மாமனாருக்கு போனில் தகவல் சொல்லி வரவழைத்தார். பின்னர் இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மோகனப்பிரியா மற்றும் அவரது 6 வயது மகள், 2 வயது மகன் ஆகியோர் படுக்கை அறையில் இறந்து கிடந்தனர். பிரேம்ராஜ் வீட்டில் இல்லை. அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வீட்டிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காணாமல் போன பிரேம்ராஜ் கரூர் மற்றும் வெள்ளியனை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அமராவதி ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது நேற்று தெரியவந்தது. போலீஸ் விசாரணையின் போது, வீட்டில் இருந்து பிரேம்ராஜ் கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 50 லட்சம் இழந்துவிட்டதால், அதை வெளியே சொல்ல தைரியம் இல்லாததால் 4 பேரும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார்.
மோகனப்பிரியா, அவரது மகள் பிரினித்தி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், இரண்டு வயது குழந்தை பிரினிராஜை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் கூறுகையில், ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த பிரேம்ராஜின் உடல் இன்று கரூரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரும் உயிரிழந்துவிட்டதால், குழந்தையை கழுத்தை நெரித்தது யார் என்பது தெரியவில்லை. ஆன்லைனில் ரூ.50 லட்சம் பணத்தை இழந்த சோகத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
4 பேரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கடந்த 4ம்தேதி அதிகாலையிலேயே எடுத்துள்ளனர். ஆனால் இரண்டு வயது குழந்தையை தூக்கில் மாட்ட முடியாததால், கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் 3 பேரின் உடல் உறுப்புகளும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. வீட்டில் 3 பேரும் இறந்ததை உறுதி செய்து கொண்ட பிரேம்ராஜ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். வீட்டின் கதவை பூட்டாமல் வீட்டில் மனைவியும், குழந்தைகளும் இருப்பது போல காட்டி கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடுமையான மன அதிர்ச்சியில் இருந்த அவர் அன்று மாலை கரூர் சென்றுள்ளார். அங்கு பல இடங்களில் சுற்றித் திரிந்த அவர், இரவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.