வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பெங்களூருவில் வங்கிக்கணக்கை முடக்கி ரூ.48 கோடி அபேஸ்: 2 பேர் கைது
பெங்களூரு: பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் திடீரென முடக்கப்பட்டன. என்ன நடந்தது என்பதை அந்நிறுவனத்தினர் தெரிந்து கொள்ளும் முன்பே அந்த கணக்கில் இருந்து 3 மணி நேரத்தில் ரூ.48 கோடி வெவ்வேறு வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. 2 நாளுக்கு பின் இதை அறிந்த தனியார் நிறுவனம், புகார் அளித்தது. பெங்களூரு சைபர் போலீசார் கடந்த 7ம் தேதி வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தனியார் நிதி நிறுவன வங்கி கணக்கில் கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த பணபரிவர்த்தனைகளை ஆய்வு நடத்திய போலீசார், இஸ்மாயில் ரஷீத் அத்தார் (27) மற்றும் சஞ்சய் பாட்டீல் (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த மோசடி எப்படி நடந்தது என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் சைபர் கிரைம் போலீசார் விவரித்தனர்.
இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- தனியார் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு சர்வர் பயன்படுத்தி முடக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பெலகாவியை சேர்ந்த இஸ்மாயில் மற்றும் சஞ்சய் பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் உதவியுடன் துபாய் நாட்டில் இருந்த 2 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்கள் எப்படி இந்த கும்பலுக்கு கிடைத்தது?. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.
தனியார் நிறுவனத்தின் இரண்டு வங்கி கணக்குகளில் இருந்து எந்தெந்த நபர்களின் கணக்கில் பணம் வரவு செய்யப்பட்டது என்கிற விவரம் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரூ.10 கோடி வரை முடக்கி வைத்துள்ளோம். சைபர் மோசடியில் கைதாகியுன்ள இஸ்மாயில் மற்றும் சஞ்சய் பாட்டீல் ஆகிய இரண்டு பேரும் 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலமாக கிடைத்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவ்விதம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். துபாய் நாட்டில் இதற்காக 5 சர்வர் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் இருந்து வங்கி பரிவர்த்தனை செய்த 2 பேர் யார்? என்பது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் ’ என்றார்.
