ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் யாரும் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம்: விழிப்புணர்வு வீடியோ மூலம் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை
சென்னை: ஆன்லைன் விளம்பரங்கள் பார்த்து பொதுமக்கள் யாரும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை விழிப்புணர்வு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தள பக்கங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் பார்த்து பொதுமக்கள் யாரும் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டு மற்றும் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை விழிப்புணர்வு குறும்படம் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் சினிமா நடிகர் காளிசரண் நடித்துள்ளார். அந்த விழிப்புணர்வு வீடியோவில் , ‘காளி சரண் தனது அலுவலகத்திற்கு மகிழ்ச்சி வருகிறார். தனது செல்போனில் ஆன்லைன் விளம்பரங்கள் பார்த்து முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்கிறார். அதற்கு மோசடி நபர்கள் அவருக்கு ரூ.1 லட்சமாக பணம் திரும்பி வழங்குகின்றனர். இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் கடன் பெற்று ஆன்லைனில் முதலீடு செய்கிறார்.
அப்போது மோசடி நபர்கள் ஒரு கோடியில் இருந்து ரூ.3 கோடிக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். இதனால் நீங்கள் ரூ.2 கோடி கட்டினால் உங்களுக்கு ரூ.6 கோடி திருப்பி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். அதை நம்பி தனது வீடு மற்றும் மனைவியின் நகைகளை விற்பனை செய்து ரூ.2 கோடி கட்டுகிறார். அதன் பிறகு, பணம் அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியவில்லை. இது குறித்து மோசடி நபர்களிடம் கேட்கிறார். அதற்கு அவர்கள் உங்கள் பணத்தை நாங்க தரமாட்டோம் என்று சொல்ல வில்லை.
எங்களுக்கான மேனேஜிமென்ட் பீஸ் ரூ.50 லட்சம் கட்டிவிட்டு மொத்த பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி மொத்த பணத்தையும் ஏமாற்றுவிடுகின்றனர். பணம் கடன் கொடுத்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்வது போன்று அந்த விழிப்புணர்வு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது’. இந்த வீடியோ சென்னை பெருநகர காவல்துறை இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்த சிறிது நேரத்தில் பொதுமக்களிடையே வைரலாக பரவி வருகிறது.
