Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பா.ஜ அரசு விரும்பியது. இதற்காக கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தேவையான பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை இக் குழுவினர் தயார் செய்தனர்.18,626 பக்கம் கொண்ட அந்த அறிக்கையை ந ஜனாதிபதி முர்முவிடம், ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவினர் நேரில் சென்று வழங்கினார்கள்.

அந்த அறிக்கையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த 100 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை ஊக்குவிக்கப்படும். ஜனநாயக அடிப்படை கொள்கைகள் மேலும் வலுப்படும். இந்தியாவின் கனவுகள் நனவாக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு:

* மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு அவை அமைந்தால் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டால் புதிய தேர்தல் நடத்தலாம். இந்த புதிய தேர்தல் என்பது அவையின் மீதம் உள்ள பதவிக்காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.

* மாநில சட்டப் பேரவைகளுக்கு புதிய தேர்தல்கள் நடத்தப்படும் போது, மக்களவையின் முழு பதவிக்காலம் முடியும் வரை அந்த அவைகள் தொடரும். இந்த வசதிக்காக, அதாவது மக்களவை தேர்தல் நடத்தும் வரை சட்டப்பேரவை பதவிக்காலத்தை நீட்டவும், குறைக்கவும் வசதியாக சட்டப்பிரிவு 83 (நாடாளுமன்றத்தின் அவைகளின் காலம்) மற்றும் பிரிவு 172 (மாநில சட்டமன்றங்களின் காலம்) திருத்தப்பட வேண்டும்.

* மக்களவை, மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்களுக்கு பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலைக் கையாளும் பிரிவு 325 இந்த நோக்கத்திற்காக பொருத்தமானதாக மாற்றலாம்.

* இப்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இது அரசுகள், வணிகங்கள், தொழிலாளர்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொது சமூகத்தின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டு, அதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். இதற்காக அரசியலமைப்பில் குறைந்தபட்ச திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

* ஒரே நேரத்தில் தேர்தல்கள் தொடர்பான உயர்மட்டக் குழு, இந்த முன்மொழிவை செயல்படுத்துவதற்கு அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்களில் 18 தனித்துவமான திருத்தங்கள் தேவை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்காக பிரிவு 325ல் மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலை தயாரிக்கலாம். மேலும் பிரிவு 324ஏ பிரிவை திருத்தி நகராட்சிகள், பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை.

* மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் தொடர்ந்து நடத்த வசதியாக பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் மக்களவையின் முதல் கூட்டத்தின் தேதியை ‘நியமிக்கப்பட்ட தேதி’ என்று ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். அதன் பிறகு தேர்தல் நடத்தப்படும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த மக்களவை தேர்தல் வரை மட்டுமே இருக்கும். இந்த ஒரு இடைக்கால நடவடிக்கைக்குப் பிறகு, அனைத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

* மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான மின்னணு இயந்திரங்கள் மற்றும் விவிபேட், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்துவது போன்றவற்றுக்கு தேர்தல் ஆணையம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இதேபோல், உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையங்களுடன் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை எப்போது அமல்படுத்த வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் குழு எதுவும் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. ஆனால் வரும் 2029 மக்களவை தேர்தலில் இருந்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சட்ட கமிஷன் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.