Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓராண்டு பாதுகாக்கும் நடைமுறை குறைப்பு; ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஓட்டுப்பதிவு தினத்தில் எடுக்கப்படும் வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மற்றும் ஓட்டுப்பதிவு தினத்தில் எடுக்கப்படும் வீடியோ உள்ளிட்ட காட்சிகள் ஓராண்டு வரை பாதுகாப்பாக வைக்கப்படும்.

சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களின் போது வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படும். வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்தால், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நீதிமன்றங்கள் அந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக தாக்கல் செய்ய உத்தரவிடும்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல்கள், வாக்கெடுப்புத் தரவுகள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரி வருகிறார். இந்த நிலையில் தேர்தல் முடிவு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், சிசிடிவி, வெப்காஸ்டிங் மற்றும் வீடியோ காட்சிகளை அழிக்குமாறு மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மே 30 அன்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், ‘தேர்தல் செயல்பாட்டின்போது புகைப்படம் எடுத்தல், வீடியோகிராபி, சிசிடிவி மற்றும் வெப்காஸ்டிங் போன்ற பல பதிவு சாதனங்கள் மூலம் தேர்தல் செயல்முறையின் பல்வேறு கட்டங்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.

ஆனால் தேர்தலில் போட்டியிடாதவர்கள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், தீங்கிழைக்கும் செய்திகளையும் பரப்புவதற்காக இந்த வீடியோ, சிசிடிவி உள்ளடக்கத்தை சமீபத்தில் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது எந்தவொரு சட்டப்பூர்வ முடிவுக்கும் வழிவகுக்காது. அத்தகைய உள்ளடக்கத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சூழலுக்கு வெளியே பயன்படுத்துவதன் மூலம் மறு ஆய்வு செய்ய வழிவகுத்துள்ளது. எனவே பல்வேறு கட்டங்களில் சிசிடிவி தரவு, வலை ஒளிபரப்பு தரவு மற்றும் தேர்தல் செயல்முறைகளின் புகைப்படம் எடுத்தல் ஆகியவை 45 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும். தேர்தல் முடிவை எதிர்த்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், அந்தத் தரவுகளை அழிக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர்களின் தனியுரிமை மீறல்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘வாக்குச்சாவடிகளின் வீடியோ காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களின் தனியுரிமையை மீறும் செயலாகும். வாக்காளர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. வீடியோ பதிவுகளின் நோக்கம் சரியானதாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்துபவர்கள் எதிர்மறையாக மாற்றி விடும் அபாயம் உள்ளது. உதாரணமாக குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால், எந்த வாக்காளர் வாக்களித்தார், எந்த வாக்காளர் வாக்களிக்கவில்லை என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் எளிதாக அடையாளம் காண முடியும். அதன் மூலம் தங்களுக்கு வேண்டாத பிரிவினரை அவர்கள் துன்புறுத்தவோ அல்லது மிரட்டவோ முடியும். எனவே வாக்காளரின் தனியுரிமை மற்றும் ரகசியத்தை பராமரிப்பதில் தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொள்ள முடியாது’’ என்றனர்.

இது 2வது திருத்தம்

தேர்தல் நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் தற்போது 2வது திருத்தம் செய்துள்ளது. இதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 93ல் சில திருத்தங்களை மேற்கொண்டது. திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளின்படி, மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.