Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர்களின் பயிற்சிக்கு ரூ.470 கோடி செலவு : அதிகபட்சமாக தடகளத்திற்கு ரூ.96 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய அரசு!!

டெல்லி : பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 33வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு மட்டும் ரூ. 470 கோடியை ஒன்றிய அரசு வழங்கி இருப்பதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் மிஷன் ஒலிம்பிக் செல்லின் அதிகாரப்பூர்வ் தரவுகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்திற்காக மட்டும் ஒன்றிய அரசு, ரூ.96 கோடி செலவிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்திற்கு ஒலிம்பிக் மேடை இலக்கு திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இம்முறை தடகளத்தில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் தலைமையில், 28 பேர் பங்கேற்கின்றனர். தடகளத்தைத் தொடர்ந்து, பேட்மிட்டன் பயிற்சி ரூ. 72 கோடியும் குத்துச் சண்டை பயிற்சிக்கு ரூ. 61 கோடியும், துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு ரூ. 60 கோடியும் செலவழிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் குறைந்தபட்சமாக குதிரையேற்ற பயிற்சிக்கு 95 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. டென்னிஸுக்காக ரூ.2 கோடியும், கோல்ப் பயிற்சிக்காக 1.75 கோடி ரூபாயும், படகு போட்டி, நீச்சல், பாய்மர படகு போட்டிக்கு தலா ரூ.4 கோடியும் ஜூடோவிற்கு ரூ.6 கோடியும், டேபிள் டென்னிஸுக்காக ரூ.13 கோடியும் பயிற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக பேட்மிட்டன் வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் பயன் அடைந்துள்ளனர். இவர்கள் 81 முறை பயணங்கள் மேற்கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக தனிநபர் அல்லது விளையாட்டுச் சார்ந்த செலவினங்களை பொறுத்தவரை இந்திய ஆடவர் ஹாக்கி அணி, அதிகபட்சமாக 42 கோடி ரூபாய் பெற்றுள்ளது.