Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் நடைபெறும்; திட்ட பணிகளை அலுவலர்கள் தினமும் களஆய்வு செய்ய வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக), பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிருவாக இயக்குநரக அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் உள்ளிட்டவைகளை விரைந்து முடித்து, சாலை சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்டு முடித்திட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறின்றி பணிகள் மேற்கொள்வதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவு பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். சாலை விரிவாக்க பணிகள், மேம்பால பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும்போது சம்பந்தப்பட்ட துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கும் குழாய்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் மழைக்காலத்திற்கு முன்னதாக மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு குளிர் தார்க்கலவை கொண்டு சாலை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள், நீராதாரங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலர்கள் தினசரி களஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.