Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அலுவலகத்திலேயே பணம் வாங்கியதை சிசிடிவியில் கண்காணித்து சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்தார் பதிவுத்துறை ஐஜி பொன்ராஜ் ஆலிவர்: நிபந்தனை விதித்து பணம் பெற்ற சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை

சென்னை: அலுவலகத்தில் வைத்து பணம் வாங்கிய சார்பதிவாளரை, சிசிடிவியில் பார்த்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். அதேபோல, நிபந்தனை விதித்து பணம் வாங்கியதாக கே.வி.குப்பம் சார்பதிவாளரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்தன. அதை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும், முறைகேடுகளை முற்றிலும் களைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியும், அடிக்கடி பதிவுத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். தவறு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகிறார். அதற்கு ஏற்றார்போல தற்போது பதிவுத்துறை ஐஜியாக உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், தனது அறையில் உள்ள அகண்ட திரையில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கியமான பதிவுத்துறை அலுவலகங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்.

அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் 6.20 மணிக்குள் ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் அலுவலகத்துக்குள் வந்து நேராக சார்பதிவாளர் ராணியின் அறைக்கு செல்கிறார். அங்கு பையில் இருந்து பணக்கட்டுகளை எடுத்து ராணியிடம் கொடுக்கிறார். அந்த பணக்கட்டுகளை ராணி வாங்கி, தனது பைக்குள் வைத்துக் கொள்கிறார். சிறிது நேரத்தில் மற்றொருவர் வருகிறார். அவர் நேராக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் 2 பேரிடம் பணம் கொடுக்கின்றார். அவர்களும் பணத்தை வாங்கி பைக்குள் வைத்துக் கொள்கின்றனர்.

இதை பார்த்ததும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் கையும் களவுமாக பதிவுத்துறை ஐஜியே பிடித்ததால், ராணியை அடுத்த 30 நிமிடத்தில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 2 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களையும் பணியில் இருந்து விடுத்து உத்தரவு பறிப்பித்தார். அதேபோல, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளராக உள்ள கவிதா, ஒரு புரோக்கரிடம் முறைகேடாக பதிவு செய்ய ரூ.25 ஆயிரம் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். ஆனால் அவ்வளவு தர முடியாது என்றதும், சரி குறைவாக கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன். அடுத்தமுறை கூடுதலாக தரவேண்டும் என்று கூறுகிறார். இது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் விசாரித்து உண்மை என்று தெரிந்ததால், கவிதாவையும் சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று உத்தரவிட்டார். பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கியதற்காக நேற்று 2 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் அலுவலகத்தில் வைத்தே, அதிகாரிகள் சிசிடிவியில் கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்தும், துணிச்சலாக லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்று அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் சிக்கி சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி கேமராவில் சிக்கி சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.