Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தால் மோதல்; வாலாட்டிய ஈரானை முடக்கிவிட்டோம்: போர் நிறுத்தத்திற்கு பின் இஸ்ரேல் முழக்கம்

டெலிஅவிவ்: அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தால் ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது ஈரானை முடக்கிவிட்டதாக போர் நிறுத்தத்திற்கு பின் இஸ்ரேல் வெற்றி முழக்கமிட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், கடந்த 13ம் தேதி இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது. இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்காவும் இந்த தாக்குதலில் நுழைந்து, சுரங்கங்களுக்குள் இருக்கும் ஈரானின் அணுசக்தி மையங்களை சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் மூலம் தாக்கியது.

இதற்குப் பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியது. கிட்டத்தட்ட 12 நாட்களாக நடந்த கடுமையான மோதலில், ஈரானில் 610க்கும் மேற்பட்ட பொதுமக்களும், இஸ்ரேலில் 28 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இந்தப் போர் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. ஈரான் இனிமேல் அணு ஆயுதத்தை பயன்படுத்த முடியாது. நாங்கள் அவர்களின் அணுசக்தித் திட்டத்தை முறியடித்துவிட்டோம். அதை மீண்டும் உருவாக்க முயன்றால், இதே தீவிரத்துடன் தடுத்து நிறுத்துவோம்’ என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மறுபுறம், ஈரானோ தங்கள் பதிலடித் தாக்குதல்களால் இஸ்ரேலை ஓடவிட்டோம் என்று கூறியுள்ளது.

மேலும், இஸ்ரேலுக்கு வரலாற்று சிறப்புமிக்க பாடம் புகட்டப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அமைதியான முறையில் அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான தங்கள் நாட்டின் உரிமைகளைத் தொடர்ந்து நிலைநாட்டுவோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் இருநாட்டு மக்களிடையே நிம்மதியைத் தந்தாலும், இந்த அமைதி நீடிக்குமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. சர்வதேச நாடுகள் இந்த போர் நிறுத்தத்தை எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இனி தங்கள் முழு கவனமும் காசா மீது திரும்பும் என இஸ்ரேல் ராணுவத் தலைவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.