Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போக்குவரத்து நெரிசலை குறைக்க நொய்யல் ஆற்றின் கரையோரம் போடப்பட்ட சாலை எப்போது பயன்பாட்டிற்கு வரும்?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: திருப்பூரில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாகன பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நொய்யல் ஆற்றின் இரு கரையோரமும் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் பணிகள் முடிவடைந்த நிலையில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்தி தொழிலில் உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக திருப்பூர் மாநகரம் இருந்து வருகிறது. பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், பணிபுரிவதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி உள்ளனர். நாளுக்கு நாள் திருப்பூர் மாநகரில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது.

அதற்கேற்றவாறு சென்னை, கோவை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பின்னலாடை மற்றும் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் சரக்குகளை கொண்டு செல்லக்கூடிய வாகனங்களும் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளான புஷ்பா ரவுண்டானா, ரயில்வே மேம்பாலம், குமரன் சாலை, வளம் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. பெரும்பாலும் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் விபத்துகளும் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் யூனியன் மில் சாலையை இணைக்கக்கூடிய வகையில் உயர் மட்ட பாலக் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதே போல் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வளர்மதி சுரங்க பால கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது. திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்க கூடிய வகையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் கட்டப்பட்டு வந்த உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 8 கிலோமீட்டர் வரை நொய்யல் ஆறு ஓடுன்றது. 6.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என திட்டமிடப்பட்டது.

அதன் காரணமாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.29.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நொய்யல் ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து நொய்யல் ஆற்றின் கரையோரம் மண் சரிவு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணியானது துவங்கியது. சாலை அமைக்கும் பணி துவங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் சாலை முழுவதுமாக அமைக்கப்பட்டு நொய்யல் ஆற்றங்கரையோரம் வாகன ஓட்டிகள் செல்லும் போது விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் நொய்யல் ஆற்றை ஒட்டி கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

ஏற்கனவே நொய்யல் ஆற்றங்கரையோரம் சாலை அமைக்கப்பட்டு வளர்மதி முதல் முதலிபாளையம் வரை நொய்யல் ஆற்றங்கரையோரம் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதிகளில் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டி சுரங்க பாலப்பணிகள், சில இடங்களில் உயர்மட்ட பாலப்பணிகள் நடைபெற்ற வருகிறது. இதனால், ஏற்கனவே திட்டமிட்ட வகையில் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு இடைப்பட்ட சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணி ஆனது பாதிக்கப்பட்டுள்ளது. கிடப்பில் உள்ள பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணியானது நிறைவு பெறும் பட்சத்தில் திருப்பூர் மாநகரில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.

நொய்யல் ஆற்றங்கரையோரம் மெட்ரோ வழித்தடம்

திருப்பூர் தொழில்துறை சார்பில் கோவை விமான நிலையத்துடன் நிறைவு பெறும் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில் நீலாம்பூர் வழியாக முத்துகவுண்டன் புதூர், சாமளாபுரம், பரமசிவம் பாளையம், சின்ன புதூர், பெரியபுதூர், வஞ்சிபாளையம், மங்களம், சுல்தான்பேட்டை, ஆண்டிபாளையம், குமரன் கல்லூரி, ராயபுரம், கருவம்பாளையம், தெற்கு ரோட்டரி, நஞ்சப்பா பள்ளி வழியாக வளர்மதி பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெறும் வகையில் 29 கிலோமீட்டர் தொலைவிற்கு உத்தேச வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பகுதிகள் நொய்யல் ஆற்றங்கரையோரம் வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பட்சத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்படும் தாமதமும் தவிர்க்கப்படும் என அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.