Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெங்கடேசபெருமாள் பாடல் விவகாரம்; ரூ.100 கோடி கேட்டு நடிகர் சந்தானத்துக்கு நோட்டீஸ்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் அனுப்பினார்

திருமலை: ₹100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானத்துக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாக உள்ளது. நகைச்சுவையுடன் திகில் நிறைந்த இந்த படத்தில் சந்தானத்துடன் கீதிகா திவாரி, செல்வராகவன் மற்றும் கவுதம்வாசுதேவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘சீனிவாசா கோவிந்தா’ என்று தொடங்கும் வகையில் ஒரு பாடல் உள்ளது. இந்த பாடலுக்கு சந்தானம் நடனமாடுகிறார்.

இந்த பாடல் யூடியூப்பில் வெளியான நிலையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகிலுள்ள பல கோடி மக்கள் புனிதமாக கருதக்கூடிய பெருமாளின் பக்தி பாடலை சினிமாவுக்காக வேண்டுமென்று பக்தர்களின் மனம் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியின் திருப்பதி மக்களவை தொகுதி தலைவர் கிரண்ராயல் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜ மாநில செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ்ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் அஜய்குமார், நடிகர் சந்தானம், தயாரிப்பு நிறுவனமான நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில், ‘இந்த படம் வெளியாவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த பாடலை நீக்க வேண்டும். ஏழுமலையான் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வெங்கடேசபெருமாளின் பக்தி பாடலை ரீமிக்ஸ் செய்து பக்தர்கள் மனம் புண்படும் வகையில் செயல்பட்டதற்காக ₹100 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.