Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களுக்கு எதுக்குமே வித்தியாசம் தெரியல.... மார்பை பிடிப்பது, பைஜாமாவை கிழிப்பது பலாத்கார முயற்சி அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சை உத்தரவு

அலகாபாத்: மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவை கிழிப்பது பலாத்கார முயற்சி அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2021ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் 11 வயது சிறுமி தனது தாயாருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சிறுமியை தங்களுடன் பைக்கில் வரும்படி அழைத்தனர். அவர் மறுக்கவே சிறுமியின் மார்பகங்களைப் பிடித்து, பைஜாமாவை கிழித்து, அவளை அரைநிர்வாணமாக்க முயன்றனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வந்தபோது, ​​இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மீது பலாத்கார முயற்சி மற்றும் போக்சோ சட்டப்படி பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா விசாரித்தார்.

அப்போது அவர் வெளியிட்ட உத்தரவு வருமாறு: குற்றம் சாட்டப்பட்ட பவன் மற்றும் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கின் உண்மைத்தன்மையை பார்க்கும் போது இது ஒரு பலாத்கார முயற்சி குற்றமாக இல்லை. பாலியல் பலாத்கார முயற்சியை உறுதிப்படுத்த, அதற்கான கட்டத்தைத் தாண்டி நடந்துள்ளது என்பதை அரசு சார்பில் நிரூபிக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும் பலாத்கார நோக்கம் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்ணை கால்வாயின் அடியில் இழுத்துச் சென்று பைஜாமாவை கிழித்ததாக கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த செயலால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாகிவிட்டதாகவோ அல்லது ஆடைகளை அவிழ்த்துவிட்டதாகவோ சாட்சிகள் தெரிவிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்த வழக்கில் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பவன் மற்றும் ஆகாஷ் மீது முதன்மைக் குற்றச்சாட்டாக பலாத்கார முயற்சி பதிவு செய்யத் தேவையில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பிரிவு 354(பி) ஐபிசியின் சிறிய குற்றச்சாட்டு சுமத்தலாம்.

அதாவது ஒரு பெண்ணை தாக்குதல் அல்லது அவரிடம் துஷ்பிரயோகம் செய்தல் அல்லது நிர்வாணமாக இருக்க வற்புறுத்துதல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இந்த உத்தரவை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் தளத்தில்,’ உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்துள்ளனர்.