Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.416.64 கோடியில் 2,580 குடியிருப்புகள்: பேரவை மானிய கோரிக்கையில் அறிவிப்பு

சென்னை: வீட்டு வசதி துறை மானிய கோரிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற உடன் சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன், வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் சிதிலமடைந்து, உறுதித் தன்மையை இழந்துள்ளது. அது போன்ற குடியிருப்புகளை வல்லுநர் குழுக்கள் கொண்டு ஆய்வு செய்ததில், 2021ம் ஆண்டு வரை சென்னையில், 73 திட்ட பகுதிகளில் 27 ஆயிரத்து 38 குடியிருப்புகளும், இதர மாவட்டகளில் 9 திட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து 354 குடியிருப்புகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 392 குடியிருப்புகள் மறுக்கட்டுமானம் செய்ய பரிந்துரைத்தது.

மேலும், 2024 மார்ச் வரை கூடுதலாக 5 ஆயிரத்து 833 குடியிருப்புகள் மறுக்கட்டுமானம் செய்யப்பட வேண்டியது கண்டறியப்பட்டது. வாரியத்தால் கண்டறியப்பட்ட சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு, 2021-22, 2022-23ம் ஆண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பில், 15,000 புதிய குடியிருப்புகள், கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 28 திட்ட பகுதிகளில் 7,582 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ரூ.1,608 கோடியே 89 லட்சம் மதிப்பில் 9 ஆயிரத்து 522 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மீதம் உள்ள குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. வடசென்னை பகுதியை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பேசின் சாலை, ஸ்டான்லி சாலை, கொடுங்கையூர், கோதண்டராமர் தெரு, கிழக்கு சிமென்டரி ரோடு ஆகிய இடங்களில், ரூ.416 கோடியே 64 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 580 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் துவங்கப்பட உள்ளது.

வாரியத்தால் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதடைந்த குடியிருப்புகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.82 கோடியே 57 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் 31 ஆயிரத்து 239 அடுக்குமாடி குடியிருப்புகள் புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 374 குடியிருப்புகள் புனரமைக்கப்பட்டு, புதுப் பொலிவு பெற்றுள்ளன. 10 ஆயிரத்து 513 குடியிருப்புகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.