ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என அதிபர் ட்ரம்ப் பேச்சு : இந்தியா திட்டவட்டமாக மறுப்பு!!
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அண்மையில் தொலைபேசியில் உரையாடியதாகவும் அப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி கொள்ளும் என மோடி உறுதியளித்ததாகவும் கூறினார்.
இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டது. மேலும் இது குறித்து பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எரிசக்தி விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்துக்கான பதிலை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார். தொலைபேசி உரையாடலை பொறுத்தவரை பிரதமர் மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையே அதுப்போன்ற எந்தவிதமான பேச்சுவாரத்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிக் கொள்கை குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முடிவுகள் இந்திய நுகர்வோரின் நலன்கள் மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படுகிறது என்றும் வெளிநாட்டு அரசியல் காரணங்களுக்காக அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
