ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று சற்று மழை குறைந்த நிலையில் மீண்டும் இரவு முதல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி, கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வாகனங்களின் மீது மரங்கள் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன. ஒரு சில குடியிருப்புகளும் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் மாலையில் ஊட்டி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு ஊட்டி-கூடலூர் சாலை சாண்டி நல்லா அருகே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்று தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கியது.