நீலகிரி மலைப்பகுதியில் ரயில் சேவையில் குறைபாடுள்ள பெட்டிகளை அறிமுகப்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை பாதித்ததாக தெற்கு ரயில்வே மீது இந்திய தணிக்கை மற்றும் கணக்காளர் அலுவலகம் (சிஏஜி) கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அனுமதியின்றி 2023 ஜூலையில் சிறப்பு ரயில் சேவையை தொடங்கி பயணிகள் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.27.91 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயங்கும் 100 வருட பழமையான 28 பெட்டிகளை மாற்ற 2015ல் தெற்கு ரயில்வே திட்டம் தயாரித்தது. ரயில்வே அமைச்சகத்தின் அறிவுரையின்பேரில் ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) புதிய பெட்டிகள் தயாரிக்க தொடங்கியது. 2019 ஏப்ரலில் முதல் நான்கு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனை மலைச் சரிவுப் பகுதியில் நடத்தப்படவில்லை என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2020 மார்ச்சில் புதிய பெட்டிகள் ஒவ்வொன்றும் 5 டன் அதிக எடையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டிய பின்னரும் ஐசிஎப் எடையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மொத்தம் 28 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு அமைப்பின் ஆலோசனையின்றியும், முன்மாதிரி பெட்டியின் வெற்றிகரமான சோதனையின்றியும் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டன என்று அறிக்கை கண்டித்துள்ளது.
தெற்கு ரயில்வே ஆறு பெட்டிகளில் மாற்றம் செய்தபின்னரும், சரிவுப் பகுதியில் சக்கரங்கள் வழுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த குறைபாடுகள் இருந்தபோதிலும் 2023 ஜூலை 15ல் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தொடங்கினார்கள். தற்போது 28 பெட்டிகளில் 15 பெட்டிகள் ரயில்வே வாரியத்தின் அனுமதியின்றி வாராந்திர சிறப்பு ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள பெட்டிகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.
முன்மாதிரி பெட்டிகள் உருவாக்க வலுவான முறைமையை அமைக்க வேண்டும் என்றும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (ஆர்டிஎஸ்ஓ) உடன் ஆலோசித்து வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்குப் பின்னரே வழக்கமான உற்பத்தி தொடங்க வேண்டும் என்றும் சிஏஜி பரிந்துரை செய்துள்ளது. குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்றும், ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்த பின் சேவை மேம்படுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. ஆனால் சிஏஜி இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.