Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாய பணிகள் துவக்கம்: தேயிலை மகசூலும் அதிகரிக்க வாய்ப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மலை காய்கறி விவசாய பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. தேயிலை மகசூலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் நீலகிரி ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் நிலவ கூடிய தட்ப வெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது, தேயிலை, காய்கறிகள், பழங்கள், நறுமண பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலை தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் மற்றும் சில கிராமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் தேயிலை, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பிளம்ஸ், பீச், பேரி, ஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது. கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு நீர்போகம், கார்போகம் மற்றும் கடை போகம் என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் ேமற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறி பயிர்கள் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிாிப்படுகிறது. நீலகிரி மக்களின் பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய தொழிலாக இவை உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் வரை நல்ல மழை பொழிவு இருந்தது. நடப்பு ஆண்டு கோடை மழை பொழிவை நம்பி விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை தயார் செய்து காத்திருந்தனர்.

ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களாக கடுமையான வரலாறு காணாத வெயில் கொளுத்தியது. இதனால் குடிநீர் ஆதாரங்கள் மட்டுமின்றி, விவசாய நிலங்களில் உள்ள நீர் நிலைகளும் வறண்டன. இதனால் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு விவசாயிகள் விவசாய பணிகளை துவக்க தயக்கம் காட்டி வந்தனர். பசுந்தேயிலை உற்பத்தியும் பாதித்தது.

இந்த சூழலில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இம்மாத துவக்கத்தில் சில நாட்கள் நல்ல மழை பொழிவு இருந்தது. அவ்வப்போது மழை எட்டி பார்த்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களை ஒட்டியுள்ள நீராதாரங்கள் நிரம்ப துவங்கியுள்ளன. இதுதவிர செயற்ைக கிணறுகளும் நிரம்பியுள்ளன.

இதனை தொடர்ந்து மலை காய்கறி விவசாய பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.

கோடை மழையை ெதாடர்ந்து ஜூன் மாதத்தில் பருவமழை துவங்கும் என்பதால் விவசாய பணிகள் மேற்கொண்டால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டு விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதேபோல் பசுந்தேயிலைக்கு ஏற்ற இம்மழை பொழிவால் அடுத்த சில நாட்களில் தேயிலை மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.