Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி கூடலூர் அருகே நிலச்சரிவு அபாயம்; நடமாட தடை; நோயாளி, முதியோர் இடமாற்றம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியில் வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட வருவாய்த்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் ஊட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். நிபுணர்கள் நாளை மீண்டும் இந்த பகுதியை ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் இந்த பகுதியில் பீதி நிலவுகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு மேல் கூடலூரை அடுத்த கோக்கால் பகுதியில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு ஒன்றரை சென்ட் நிலம் வழங்கப்பட்டதால் இப்பகுதி, ஒன்றரை சென்ட் காலனி என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் பெய்த மழையால் 15-க்கும் மேற்பட்ட வீடு, ஜெபக்கூடம், முதியோர் காப்பகம் ஆகியவற்றில் விரிசல் ஏற்பட்டது. 48 முதியோர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

2 குடும்பத்தினர் முகாம்களிலும், மீதம் உள்ளவர்கள் வாடகை வீடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். அப்போது புவியியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இதனிடையே இங்கும் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற வதந்திகள் வைரலானது. இதனால் இங்குள்ள அரசு மருத்துவமனை நோயாளிகள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்நோயாளிகள் பிரிவுகளும் மூடப்பட்டன. மீண்டும் மத்திய புவியியல் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1ம் தேதி 2வது முறையாக இப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். நாளை (6ம் தேதி) மீண்டும் இப்பகுதியில் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இப்பகுதியில் நடமாட தடை விதிக்கப்பட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவசர உதவிக்கு அலுவலர்கள் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் பீதி நிலவி வருகிறது.

வெறிச்சோடிய நீலகிரி

கேரள மாநிலம் வயநாடு 360க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுலா சொர்க்க பூமியான நீலகிரிக்கு வெளிமாவட்டங்களை தவிர கேரளா வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா குண்டல்பேட், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள். நிலச்சரிவுக்கு பின்னர் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் குறைந்த அளவே காண முடிந்தது. சமவெளி பகுதி மக்களும் நிலச்சரிவு அச்சம், மழையால் ஊட்டிக்கு சுற்றலா வர அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.