Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை ஒட்டி, மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

நீலகிரி: நீலகிரியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சமயங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட செயல்பாடுகள் செய்ய வேண்டாம்.

* அதிக மழைபொழிவு ஏற்படும் போது பொதுமக்கள் நீரோடைகளுக்கு அருகில் செல்லவோ, அருகில் நடக்கவோ கூடாது.

* ஆற்றில் குளிக்கவோ ஆற்றினை தனியாகவோ அல்லது வாகனங்கள் மூலம் கடக்கவோ கூடாது.

* குழந்தைகளை வெள்ள நீரில் விளையாட அனுமதிக்க கூடாது.

* ஓடும் நீரில் நடக்க வேண்டாம். ஏனெனில் நீரோட்டமானது, ஆழமற்றது போல் தோற்றமளிக்கலாம். ஆனால் வேகமாக ஓடுகின்ற நீர் உமது கால்களை இடறி விடலாம்.

*வேகமாக ஓடும் நீரில் நீந்த வேண்டாம். ஏனெனில், அந்நீரால் அடித்துச் செல்லப்படலாம் அல்லது நீரில் உள்ள பொருளின் மீது மோதிக்கொள்ள நேரிடலாம்.

* நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் அத்தகைய நேரங்களில் அத்தியாவசியப் பணிகளை தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வாகனங்களை மரங்களின் அடியிலோ, தடுப்பு சுவர்களின் அருகிலோ நிறுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

* அதிக மழைப்பொழிவின் போது மின்கம்பங்கள் சாயவும் மின்கம்பிகள் அறுந்து விழவும் வாய்ப்புகள் உள்ளதால் பொது மக்கள் அத்தகைய சூழ்நிலையில் மின்கம்பங்கள், மின்கம்பிகள், ஆகியவற்றை தொடவோ அருகில் செல்லவோ முயற்சிக்க கூடாது.

* எனவே, நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது 24X7 முறையில் இயங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. உதகை கோட்டத்திற்கு 0423- 2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262- 261295, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252 மற்றும் பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

* எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்படி எவ்வித இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையவேண்டாம் எனவும் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.