Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீலகிரிக்கு வலசை வர துவங்கிய வெளிநாட்டு பறவைகள்: முதன்முறையாக கிரே நெக்டு பன்டிங், பிளாக் ஹெட் பன்டிங் இனங்கள் பதிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் காலநிலை ஐரோப்பிய நாடுகளில் காலநிலையை ஒத்துள்ளது. இதனால், ஐரோப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் நீலகிரி மாவட்டத்துக்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பறவையினங்களும் நீலகிரி மாவட்டத்துக்கு வலசை வருகின்றன. குறிப்பாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்து பல்வேறு வகை பறவையினங்கள் நீலகிரிக்கு வலசை வரும். இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள் அதிகளவில் ஊட்டி ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள சதுப்பு நிலங்கள், தலைகுந்தா பகுதியில் உள்ள காமராஜ் சாகர் அணை போன்ற பகுதிகளில் கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறித்த பின்னர் சொந்த நாடுகளுக்கு திரும்பி விடும்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான குளிர்காலம் துவங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாக இனப்பெருக்கத்திற்காக பறவைகளின் வருகை துவங்கியுள்ளது. அவ்வாறு வரும் பறவைகள், அதிகளவில் ஊட்டி ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள சதுப்பு நிலங்கள், தலைகுந்தா பகுதியிலுள்ள காமராஜ் சாகர் அணை, கிளன்மார்கன், பைக்காரா அணை, மாயார், அவலாஞ்சி, கெத்தை நீர்நிலை பகுதிகள் போன்ற நீர்நிலைகள், முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் காணப்படும் சிறு நீர் குட்டைகள் போன்றவற்றில் ஆகிய பகுதிகளில் தென்படுகின்றன. பறவைகள் வருகை அதிகரித்திருப்பது மாவட்டத்தில் உள்ள பறவை பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அவர்கள் முதல் முறையாக வந்த இரு பறவை இனங்களை பதிவு செய்து உள்ளனர்.

‘பேட் வாட்சர்’ எனப்படும் பறவை பார்வையாளர் சந்திரசேகர் தாஸ், இந்த ஆண்டு முதல் முறையாக இரண்டு பன்டிங் இனங்களைப் பதிவு செய்ததாகக் கூறினார். அவர் கூறும்போது, ‘‘கோத்தகிரியில் பகுதியில் கிரே நெக்டு பன்டிங் (சாம்பல் கழுத்து பன்டிங்) தென்பட்டது. அதே நேரத்தில் மசினகுடியில் பிளாக் ஹெட் பன்டிங் (கருப்புத் தலை கொண்ட பன்டிங்) காணப்பட்டது. இது தவிர வழக்கமாக வரக்கூடிய பல்வேறு பறவை இனங்களையும் மலைப்பகுதிகளில் பார்க்க முடிந்தது. யூரேசிய ரைனெக், காஷ்மீர் ப்ளை கேட்சர், பின்டெயில் ஸ்னைப், விஸ்கர்டு டெர்ன், இந்தியன் ப்ளூ ராபின் மற்றும் ப்ளூ ராக் த்ரஷ் உள்ளிட்டவைகள் அடங்கும்’’ என்றார்.

மற்றொரு பறவை ஆர்வலரான முரளி மூர்த்தி கூறுகையில், ‘‘பெரிய புள்ளி கழுகு மற்றும் புல்வெளி கழுகு உள்ளிட்ட பல வேட்டையாடும் பறவைகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவின் ஆழமான பகுதிகளிலிருந்து, வரும் ஸ்டேபி கழுகு சிறிய பாலூட்டிகளை கூட சுமந்து சென்று, அவற்றை மிக உயரத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு, பின்னர் இறைச்சியை உண்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய குளிர்காலத்தைத் தவிர்க்க இவ்வளவு அற்புதமான ராப்டர் நீலகிரிக்கு வருவதைப் பார்ப்பது உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறது’’ என்றார்.