Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீலகிரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் வினித் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து கண்காணிப்பாளர் வினீத் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொது மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்று சேருவதை கண்காணிக்கும் வகையில், மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் விவரம் குறித்தும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், இதேபோன்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் குடியிருப்பு கட்டுமான பணிகளின் விவரம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம், தற்போதைய நிலை குறித்தும், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில், துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் வினித் பேசினார்.

முன்னதாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) மாவட்ட கண்காணிப்பு அலுவலர், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட உமரி காட்டேஜ் மற்றும் ஓட்டுப்பட்டரை ஆகிய பகுதிகளில் 15வது நிதிக்குழு சுகாதார மானியத்திட்டத்தின் கீழ் தலா ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமான பணிகளையும், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.16.82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடையின் கட்டுமான பணியையும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

உபதலை ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் மற்றும் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.1.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளையும் ஆய்வு செய்தார்.

மேலும், உபதலை ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.76 கோடி மதிப்பில் குப்பைக்குழி முதல் சோகத்தொரை வரை முடிவுற்ற சாலை பணியையும், எடப்பள்ளி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டடத்தின் கட்டுமான பணியினையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணையில், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், குன்னூர் லாலி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உதகை சேரிங்கிராஸில் பகுதியில் உள்ள முதல்வர் மருந்தக கடையில் மருந்துகளின் இருப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், இணை இயக்குநர்கள் ராஜசேகரன் (மருத்துவ நலப்பணிகள்), ஷிபிலா மேரி (தோட்டக்கலைத்துறை), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், பொதுப்பணித்துறை செயற்பொறியளர் திரு.ரமேஷ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.சோமசுந்தரம் உட்பட பலர் உடன் இருந்தனர்.