மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது தாக்கியதில் கடந்த ஜூன் 28ல் இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20ம் தேதி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அப்போது, நகை காணாமல் போனதாக பேராசிரியை நிகிதா அளித்த புகார் குறித்தும் சிபிஐ தரப்பில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், பேராசிரியை நிகிதா காரில் இருந்த நகை மாயமானதாக அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் என்ற இடத்தில் ‘அடையாளம் தெரியாதவர்’ என குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நிகிதா, தாயார் சிவகாமி மற்றும் அஜித்குமாருடன் பணியாற்றிய பணியாளர்கள், கோயில் அதிகாரிகள் மற்றும் திருப்புவனம் போலீசார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில்தான் உண்மையில் நகை காணாமல் போனதா, திருடியது யார் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
+
Advertisement