Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நியூயார்க்கில் நடந்த ‘மோடியும் அமெரிக்காவும்’ நிகழ்ச்சி; ‘ஏஐ’ என்றால் ‘அமெரிக்கா - இந்தியா’ என்று அர்த்தம்: இந்திய வம்சாவளிகளுடன் பிரதமர் மோடி உரை

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த ‘மோடியும் அமெரிக்காவும்’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளிகளுடன் பேசிய பிரதமர் மோடி, ‘ஏஐ’ என்றால் அமெரிக்கா - இந்தியா என்று அர்த்தம் என்று கூறினார். மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, லாங் ஐலேண்டில் நடைபெற்ற ‘மோடியும் அமெரிக்காவும்’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி மக்களிடையே பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு என்றால் ‘ஏஐ’ என்று உலகம் சொல்கிறது. ஆனால் என்னை பொருத்தமட்டில் ஏஐ என்றால் அமெரிக்கா - இந்தியா என்று கூறுகிறேன். ஏஐ தொழில்நுட்பமானது புதிய உலகின் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் புதிய இலக்குகளை எட்டும். இந்தியா யார் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பவில்லை; ஆனால் உலகின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறது. உலக அமைதியை விரைவுபடுத்துவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது, அனைவருடனும் சமமான தூரத்தை பேணுவது அல்ல; மாறாக அனைவருடன் சமமான நெருக்கத்தை கடைப்பிடிப்பதாகும். இது போருக்கான நேரம் அல்ல; போரின் தீவிரத்தை அனைத்து நண்பர்களும் புரிந்துகொண்டுள்ளனர். உலகில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவே முதலில் உதவ முன்வந்துள்ளது. நிலநடுக்கம், உள்நாட்டுப் போர், ெகாரோனா காலங்களில் இந்தியாவின் உதவி முதலில் அங்கு சென்றடைகிறது’ என்றார்.

பிரதமர் மோடியின் உரையை கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள், ‘மோடி... மோடி...’ என்ற முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய சமூகத்தின் தூதர்கள் ஆவர். பாரதத்தின் மதிப்புகளும் கலாசாரமும் நம்மை ஒன்றிணைக்கிறது. இந்தியா நெருப்பு போன்றது அல்ல; ஒளியை தரும் சூரியனைப் போன்றது. உண்மையில் நான் வேறொரு பாதையை தேர்ந்தெடுத்தேன்; ஆனால் விதி என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. நான் முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் குஜராத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தேன்.

அதன் பிறகு மக்கள் எனது பதவியை உயர்த்தி பிரதமராக்கினார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவுக்காக உயிரை தியாகம் செய்ய முடியாவிட்டாலும், இந்தியாவுக்காக நாம் வாழலாம். அதிக மக்கள் தொகை கொண்ட இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால்தான் நம் நாடு ஆற்றல் வளம் நிறைந்த நாடாக உள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் பாதையில் பயணிக்கிறது’ என்று பேசினார்.

நேபாளம், குவைத் தலைவர்களுடன் சந்திப்பு: பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘நியூயார்க்கில் நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஒலியுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-நேபாள நட்புறவு மிகவும் வலுவானது; இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, மேலும் புதிய உத்வேகத்தை அடையும் என்று நம்புகிறோம். குறிப்பாக எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து பேசினோம்’ என்றார். அதேபோல் மற்றொரு பதிவில், ‘குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மருந்து, உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பல துறைகளில் இந்தியா - குவைத் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை உள்ளிட்ட சிஇஓ-க்கள் உடன் சந்திப்பு: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர், இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்தார். தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவன சிஇஓ-க்கள் பங்கேற்ற வட்டமேசை கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடாப் சிஇஓ சாந்தனு நாராயண், ஐபிஎம் சிஇஓ அர்விந்த் கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது ஏஐ, குவாண்டம் கம்யூட்டிங், செமிகண்டக்டர்ஸ் குறித்தும் பேசப்பட்டது. இந்தியாவின் அனைத்து மக்களும் இதனை ‘அக்சஸ்’ செய்வதற்கான சாத்தியங்கள் குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.