Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜிம்பாப்வேயுடன் இன்று 3வது டி20: முன்னிலை பெற இந்தியா முனைப்பு

ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இந்தியா, 2வது போட்டியில் 100 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. டி20 தொடர், உலக கோப்பையில் தொடர்ந்து 12 வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி ஹராரேவில் தான் முதல் தோல்வியை சந்தித்தது. எனினும், அடுத்த போட்டியிலேயே சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள் தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளனர்.

ரோகித், கோஹ்லி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், இளம் வீரர்கள் சர்வதேச டி20ல் முத்திரை பதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 2வது போட்டியில் சதம் விளாசிய அபிஷேக், அவருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த ருதுராஜ், ரிங்கு சிங் அதிரடிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் வெளுத்து வாங்க சாய் சுதர்சனும் காத்திருக்கிறார். முகேஷ், ஆவேஷ், பிஷ்னோய், வாஷிங்டன் பந்துவீச்சும் ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி கொடுக்கும். அதே சமயம் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் முன்னிலை பெற வரிந்துகட்டுகிறது.

ஒரு காலத்தில் கவனிக்கதக்க அணியாக இருந்த ஜிம்பாப்வே, இப்போது உலக கோப்பைக்கு தகுதி பெறுவதே பெரும்பாடாக உள்ளது. எனினும், சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் ஜிம்பாப்வேவுக்கு சாதகமான அம்சங்கள்.இரு அணிகளுமே 2வது வெற்றிக்கு குறி வைப்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிவம் துபே, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளதுடன் நேற்று தீவிர வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டனர். 3வது போட்டியில் இவர்கள் களமிறங்கத் தயாராகி உள்ளதால், இந்திய அணி மேலும் வலுவடைந்துள்ளது.

* ஜூன் மாத சிறந்த வீரர்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த உலக கோப்பை டி20 தொடரில் அபாரமாகப் பந்துவீசிய பும்ரா தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

* தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடர் வரை இந்த பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட், இந்திய அணியை மீண்டும் உலக சாம்பியனாக்கிய திருப்தியுடன் விடைபெற்றார். இந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் (42 வயது) நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார். கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் செயல்பட உள்ளார்.