Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜீரோ பட்ஜெட்டில் ஜோரா ஒரு பயணம் !

ஒரு பயணம் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மாதமாவது திட்டமிடுவோம். அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயணம் என்றாலே குடும்பமாக செல்கிறோம் எனில் இன்னும் நமது திட்டம் இரண்டு மாதங்களுக்கு கூட நீளும். போக்குவரத்து முதல் தங்கும் வசதி, உணவு, என அனைத்தையும் திட்டமிட்டு ஒரு பெரும் செலவில்தான் ஒரே மாநிலத்திற்குள் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலும் திட்டம் போடுவோம். ஆனால் சரஸ்வதி ஐயர் என்னும் பெண் வெறும் இரண்டு புடவைகள், ஒரு கூடாரம் , ஒரு பவர் பேங்க் உடன் மொத்த இந்தியாவையும்சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு சாதாரண பெண்ணின் பயணக்கதையாக இல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னையே பணயமாக வைத்திருக்கிறார் சரஸ்வதி ஐயர். மேலும் இது சுதந்திரத்தின் அடையாளமாகவும் இப்போது மாறியிருக்கிறது.“ஜீரோ பட்ஜெட்” பயணம் இதில் வெறும் இரண்டு புடவைகள், ஒரு டென்ட் கூடாரம், ஒரு பவர் பேங்க், மற்றும் ஒரு பையில் தேவையான வாட்டர் பாட்டில், டார்ச் லைட், போன்ற சிறிய பொருட்களுடன் தொடங்கியுள்ளார். பணம் இல்லாமல் உலகத்தை சுற்ற முடியாது என்ற நம்பிக்கையை முழுவதுமாக உடைத்திருக்கிறார் சரஸ்வதி.

அவர் பயணிக்கும் போது எந்தப் பொது போக்குவரத்தையும், விமானம் அல்லது ரயில் டிக்கெட்டையும் வாங்குவதில்லை. மேலும் பேருந்தில் கூட ஏறுவதில்லை. அதற்குப் பதிலாக “ஹிட்ச்ஹைக்கிங்” அல்லது லிப்ட் (hitchhiking) எனப்படும் முறையைப் பயன்படுத்துகிறார். அதாவது அவர் செல்லும் வழியில் கடக்கும் லாரி, வேன் அல்லது பைக்கில் செல்வோரிடம் அனுமதி கேட்டுப் பயணம் செய்வது. சில நேரங்களில் அவர் நடைபயணம் செய்கிறார். சிலர் சரஸ்வதியை பார்த்து நம்பிக்கை கொண்ட வாகன ஓட்டிகள் தாமாகவே இடம் அளித்து அழைத்துச் செல்கிறார்கள்.

இதனால் அவரின் பயணம் மனிதத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறுகிறது.உணவுக்காகவும் அவர் பணம் செலவிடுவதில்லை. அவர் இருக்கும் இடத்தில் உள்ள மக்கள் அல்லது அவர் தங்கும் ஆலயம், ஆசிரமம், அல்லது தர்மசாலாக்களில் கிடைக்கும் எளிய உணவுகளை சாப்பிடுகிறார். சில சமயம் சிறிய வேலைகள் செய்து அல்லது பயணக் கதைகள் பகிர்ந்து, சமூக ஊடகங்களில் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பதிவு செய்து, அதற்குப் பதிலாக உணவு சாப்பிடுகிறார் . அவர் “பணம் இல்லாத வாழ்க்கை\” என்கிற குறிக்கோளை எடுத்துக்கொண்டு, பயணித்து வருகிறார். ஒரு சில உணவகங்களில் சப்ளையராக பணி, டேபிள்களை துடைத்து அதற்கு பலனாக அங்கேயே சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறார்.

பெரும்பாலும் ஆலயங்கள், மலைப் பகுதிகள், கிராமங்களின் சுகாதாரஅலுவலகங்கள், பஞ்சாயத்து கூடாரங்கள், ஆசிரமங்கள், வேளாண் அலுவலகங்கள் என தங்குகிறார். அவ்வப்போது உடன் எடுத்து வந்த கூடாரம் சிறிய வீடாக மாறுகிறது; மழை, காற்று, வெப்பம். என அனைத்தையும் எதிர்கொண்டு அதில்தான் அவர் இரவு பொழுதை கழிக்கிறார். வாகனம், ஹோட்டல், அல்லது ஆடம்பர வசதிகளில்லாமல் பயணிப்பது ஒரு சவாலாக இருந்தாலும், அதே நேரத்தில் சுதந்திரம் தரும் அனுபவமாக இருக்கிறது என்கிறார் சரஸ்வதி. மேலும் தனது பயணத்தில் எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், நண்பர்கள், உதவ முன் வரும் மனிதநேயமிக்க மக்கள் பலரையும் சந்தித்திருப்பதாக தனது சமூக வலைதள பதிவுகளில் பகிர்ந்து கொண்டே செல்கிறார்.

சரஸ்வதி ஐயரின் “ஜீரோ பட்ஜெட்” பயணம் ஒரு பெண் தனியாக இந்தியா முழுவதும் சென்று மக்களின் நம்பிக்கையால், அவர்களின் அன்பால், இயற்கையால் வாழ முடியும் என்பதை நிரூபிக்கும் நோக்கமாக மாறி இருக்கிறது. ஒரு பெண் தன்னந்தனியாக எங்கும் செல்ல முடியும், மேலும் பணம் இல்லாமல் நம் இந்திய தேசத்தில் எளிமையான அதே சமயம் மனதுக்கு நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் எனவும் நிரூபித்து வருகிறார் சரஸ்வதி. அவர் எங்கே சென்றாலும் உள்ளூர் காவல்துறையின் எண்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அடுத்த ஊருக்கு பயணிக்கிறார் சரஸ்வதி. இவர் பயணத்தில் சந்தித்த மக்கள் பலரின் தொடர்பு எண்கள், உணவகங்களின் தொடர்புகள், காவல்துறையின் உதவிகள் என அனைத்தையும் சின்ன சின்ன பதிவுகளாக சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்வதால் இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக மாறி இருக்கிறது.

ஆச்சரியம் என்னவென்றால் மகாராஷ்டிராவை சேர்ந்த சரஸ்வதி ஐடி துறையில் பல லட்சங்கள் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர். இப்போது தனது கனவான இந்த ஜீரோ பட்ஜெட் பயணத்தின் காரணமாக வேலையை விட்டுவிட்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் சரஸ்வதி. இவரது இந்தப் பயணம் பலருக்கும் எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன் பயன்பாட்டை முழுமையாக தெரிந்து கொண்டு மேப் உள்ளிட்ட வசதிகளை நன்கு தெரிந்துகொண்டு இது போன்ற பயணங்களை மேற்கொள்ளுங்கள் என்கிறார் சரஸ்வதி. சரஸ்வதியின் இந்த பயணம் குறித்து தெரிந்து கொண்ட அந்தந்த ஊர் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அவர்கள் ஊருக்கு வரும்பொழுது வரவேற்பு கொடுத்து தங்க இடம் மற்றும் உணவு என அத்தனை வசதிகளும் செய்து கொடுத்து கவனித்துக் கொள்கிறார்கள். எல்லா நாடும் பாதுகாப்பான நாடு தான் ஆனால் நாம் அங்கிருக்கும் பாதுகாப்பு வசதிகளை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்கிறார் இந்த ஜீரோ பட்ஜெட் டிராவல் ஷீரோ!

- ஷாலினி நியூட்டன்