Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐரோப்பிய தலைவர்களுடன் ஜெலன்ஸ்கி நேரடி ஆலோசனை; ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?; நேருக்குநேர் புதின் - ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுக்கு உடன்பாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே அமைதி உச்சி மாநாடு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான மூன்றரை ஆண்டுகளாக நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் இந்தியாவுக்கு எதிராக 50% வரிவிதிப்பை அறிவித்தார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால், உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வராமல் ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் அலாஸ்கா சென்ற ரஷ்ய அதிபர் புதினிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், நேற்றிரவு அந்நாட்டு அதிபர் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜெலன்ஸ்கி, ‘வாஷிங்டனில் இன்று முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதிபர் டிரம்புடன் பல சிக்கல்களான விசயங்கள் குறித்து விவாதித்தோம். நீண்ட மற்றும் விரிவான உரையாடல் நடந்தது. போர்க்களத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக, உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தினார். மேலும், இந்த உத்தரவாதங்களின் மற்றொரு பகுதியாக, உக்ரைனில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும், அவற்றில் சிலவற்றை அமெரிக்கா கொள்முதல் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பான முறையான ஒப்பந்தம் அடுத்த வாரம் அல்லது 10 நாட்களுக்குள் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருடன் நடைபெறவிருக்கும் முத்தரப்பு சந்திப்பு குறித்த தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் ஜெலன்ஸ்கி தெளிவுபடுத்தினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘முத்தரப்பு சந்திப்பு தேதி இன்னும் முடிவாகவில்லை. அமெரிக்காவுடன் ரஷ்யா முதலில் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதன் முடிவுகளைப் பொறுத்து முத்தரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. அமைதியை நோக்கிய பாதையில் உக்ரைன் ஒருபோதும் ஓயாது; தலைவர்கள் மட்டத்திலான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டது. ரஷ்யாவால் பிடித்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகள், பொதுமக்கள் மற்றும் உக்ரைன் குழந்தைகளை மீட்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கப் புள்ளியாக இந்த பேச்சுவார்த்தை அமையும் என்றும், இந்த உத்தரவாதங்களில் அமெரிக்கா பங்கெடுப்பது முக்கியமாக இருக்கும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த டிரம்ப், தனது சமூக வலைதளத்தில், ‘ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது குறித்து விவாதிக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் மக்ரோனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘புதின் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள விரும்புகிறார் என நினைக்கிறேன்’ என்று கூறியது எதிர்பாராதவிதமாக ஒலிவாங்கி மூலம் பதிவானது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, தனது கடும் எதிரியான புதினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

கூட்டத்தின் முடிவில், அதிபர் டிரம்ப் நேரடியாக ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ரஷ்ய அதிபர் புதினிடம் பேசினேன்; அவரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒரு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் சந்திப்புக்கான இடம் பின்னர் தீர்மானிக்கப்படும். இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு, இரு தலைவர்களுடன் சேர்ந்து நானும் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்பை நடத்த எதிர்பார்க்கிறேன். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் கவனித்து வருவார்கள்’ என்றார். ரஷ்ய செய்தி நிறுவனங்களின்படி, இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதை கிரெம்ளின் உதவியாளர் உறுதிப்படுத்தினார். அப்போது, ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், மாஸ்கோவும் வாஷிங்டனும் தகவல் தொடர்பு வழிகளைத் திறந்து வைக்க விரும்புவதைக் குறிக்கும் வகையில், உக்ரைன் நெருக்கடி மற்றும் பிற உலகளாவிய சிக்கல்கள் குறித்து நெருங்கிய தொடர்பில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால், ரஷ்யா - உக்ரைன் தலைவர்கள் நேரடி பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டதால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.