திருமலை: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவை சேர்ந்தவர் ரஷித்(25). ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர். அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் கேஷியராகவும் இருந்தார். இந்நிலையில் ரஷித் நேற்றுமுன்தினம் இரவு பணி முடித்து வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஷேக் ஜிலானி(30) ரஷீத்தை வழிமடக்கி கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டினார்.
இதில் ரஷீத்தின் ஒரு கை துண்டாகி சாலையில் விழுந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத ஜிலானி சரமாரி வெட்டியதில் ரஷித் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘உங்களது கொலைகார அரசியலுக்கு இன்னும் எத்தனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பலிகடா ஆக்கப்பட வேண்டும். இது போன்ற கொடுமைகள் நாட்டில் எங்காவது நடக்குமா? என்று பதிவிட்டுள்ளது.