Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

செந்தில் பாலாஜி சொல்லி செருப்பு வீசியதாக அவதூறு பேச்சு யூடியூபர் சங்கர், ஹரி நாடார் மீது தே.பா.சட்டத்தில் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வீரலட்சுமி பரபரப்பு புகார்

சென்னை: கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜி சொல்லி கூட்டத்தில் செருப்பு வீசியதாக பொதுமக்களிடையே வதந்திகளை பரப்பி வரும் யூடியூபர் சங்கர், மாலதி மற்றும் ஹரி நாடார், வரதராஜன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தனியார் யூடியூப் சேனலில் ஹரி நாடார் சுமார் 3 நிமிடம் காணொலியில் கரூரில் நடிகர் விஜய் பேசிக்கொண்டிருந்த போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆள் வைத்து நடிகர் விஜய் மீது செருப்பை தூக்கி அடித்ததாக ஒரு அவதூறு செய்தியை நாட்டு மக்களிடையே ஒரு பொய்யான அவதூறை பரப்பியுள்ளார்.

உண்மையில் கரூரில் நடிகர் விஜய் பேசிக் கொண்டிருந்த போது, கூட்ட நெரிசலில் சிலர் கீழே விழுந்ததும் இறந்து கொண்டிருந்தனர். அப்போது விஜய் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தார். எப்படியாவது இந்த கோர சம்பவத்தை விஜய் பார்க்க வேண்டும், பேச்சை நிறுத்த வேண்டும். இறந்தவர்களை மீட்க வேண்டும் என்று கூட்டத்தில் இருந்த தவெக தொண்டர்களே விஜய்யை கூப்பிடுகிறார்கள். நடிகர் விஜய் அதற்கு செவி சாய்க்கவில்லை. பிறகு கையில் இருக்கும் தண்ணீர் கேன்களை தூக்கி வீசுகிறார்கள். பின்பு கையில் எந்த பொருளும் இல்லாத சூழ்நிலையில் காலில் இருக்கும் செருப்பை தூக்கி வீசுகிறார். இதுதான் நடந்த உண்மை. இதை மறைத்து ஹரி நாடார் தமிழ்நாட்டின் அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்ய மக்களை தூண்டுவதற்கும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும், அரசு மீது களங்கம் ஏற்படுத்த விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதேபோல், 2 நாட்களுக்கு முன்பு சவுக்கு மீடியா நெட்வொர்க் என்ற யூடியூப் விஜய் மீது கொலை பழியை சுமத்தும் திமுக. அரவணைக்கும் பாஜ, அதிமுக என்ற தலைப்பில் ஒரு காணொலி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தொடக்கத்தில் இருந்து 28 நிமிடம் முடியும் வரை இடைப்பட்ட வீடியோவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி செருப்பு வீசப்பட்டதாகவும், மாலதியும், யூடியூபர் சங்கரும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பியுள்ளனர். மேலும், மற்றொரு யூடியூப் சேனலில் நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜன் என்பவர் கடந்த 5ம் தேதி திமுகவிற்கு ஆதரவாக நீதிபதி என்ற தலைப்பில் கரூரில் நடந்த நடிகர் விஜய்யால் ஏற்பட்ட மனித படுகொலைக்கு நீதிபதி உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க கருத்துகளையும், உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.

இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, புகழ், நாட்டு மக்கள் மத்தியில் வெகுவாக பரவியது. நீதித்துறையின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை கூட்டியுள்ளது. இந்த நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த காணொலி முழுவதும் நீதிமன்றம் குறித்தும், நீதிபதி குறித்தும் அவதூறுகளையும், வதந்திகளையும் பேசி பரப்பியுள்ளார். இதனால் நாட்டு மக்களுக்கு அரசின் மீது வன்மம் ஏற்பட்டு கலவரம் ஆவதற்கு வாய்ப்புள்ளது.எனவே பொய் செய்திகளை பரப்பி கலவரத்தை தூண்டும் இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.