கோவை: யூடியூபர் கோபி மற்றும் சுதாகருக்கு மிரட்டல் விடுத்த திரைப்பட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பரிதாபங்கள் யூடியூப் நடத்தி வரும் கோபி, சுதாகர் ஆகிய இருவரும் யூடியூப் சேனலில் சொசைட்டி பரிதாபங்கள் என்ற வீடியோ மூலம் ஆணவக் கொலைகளுக்கு காரணமாக உள்ளவற்றை விளக்கி, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், கல்வி சார்ந்து முன்னேறுவோம், ஒற்றுமையாக இருப்போம் என்பதை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியான நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் என்பவர் கோபி, சுதாகர் இருவரையும் மிரட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் போன வருடம் குருபூஜை பற்றி பேசிய சவுக்கு சங்கரின் நிலை தெரியுமா? சித்தர் கிட்ட விளையாடாதே நீங்க எல்லாம் ஒரு ஆளே கிடையாது என்று வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதே வீடியோவில் சுர்ஜித்தின் ஆணவக்கொலையை ஆதரித்து பேசி சமூகப் பதட்டத்தை உருவாக்கி வருகிறார். எனவே சவுத்ரி தேவர் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.