Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கப்பதக்கம் தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கினார்

சென்னை: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷை பாராட்டி, ஊக்கத்தொகையாக தலா 25 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி வாழ்த்தினார். தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் கடந்த 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமானது.

சுற்றுப்போட்டித் தொடராக நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஏழு நாடுகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்பு ஏழு அணிகள் ரவுண்ட் ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இரண்டிலும் அசத்தலான ஆட்டங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு திறமையான கபடி வீரர்கள் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் (ஆண்கள் பிரிவு) மற்றும் சென்னை கண்ணகிநகரைச் சேர்ந்த கார்த்திகா ரமேஷ் (பெண்கள் பிரிவு) ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமான முக்கிய வீரர்களாக திகழ்ந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த அபினேஷ் மோகன்தாஸ் என்பவர் 2019 முதல் 2025 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேனியில் உள்ள விளையாட்டு விடுதியில் முறையான பயிற்சி பெற்று தனது திறனில் முன்னேற்றம் கண்டுள்ளார். சென்னை, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் கார்த்திகா ரமேஷ் தேசிய அளவிலான SGFI, Khelo India மற்றும் Federation Nationals உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 11 முறை தமிழ்நாட்டிற்காக விளையாடி, அதில் 8 பதக்கங்களை வென்ற சிறப்புடைய திறமையான விளையாட்டு வீராங்கனை ஆவார்.

மேலும், அவர் 5 முறை தமிழ்நாடு அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்று அணியை வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து வெளிப்படுத்திய விளையாட்டு திறமைக்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உயரிய ஊக்கத் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளார்.

ஆசிய அரங்கில் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோரை பாராட்டினார். மேலும் ஊக்கத்தொகையாக கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு தலா 25 லட்சம் என மொத்தம் ரூ.50,00,000 (ஐம்பது லட்சம்) ஊக்கத் தொகை வழங்கினார்.

முதல்வர் உத்தரவின்படி, ரூ.15,00,000 உயரிய ஊக்கத்தொகை மற்றும் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் கபடி நட்சத்திரங்களின் சிறந்த சாதனையை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து கூடுதலாக ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது. இந்தக் சாதனை தமிழ்நாடு ஒரு முன்னணி விளையாட்டு மாநிலமாக உருவெடுத்து வருவதற்கான உறுதியான சான்றாகும்.

விளையாட்டாளரை மையப்படுத்திய திட்டங்கள், அறிவியல் சார்ந்த பயிற்சி முறைகள் மற்றும் மேம்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம், இந்திய அளவிலான சாம்பியன்களை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றப் பயணத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்நிகழ்வின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்கள் மா.ராஜேஷ், மா.நாகராஜன் மற்றும் கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷ் ஆகியோரது பெற்றோர்கள் உடனிருந்தனர்.

* ‘சமூகநீதி மண் பெருமை கொள்கிறது’

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா ரூ.25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, ‘‘உங்க ஏரியாவில் இப்ப பிரச்னைகள் தீர்ந்திருக்கா?’’ என்று கார்த்திகாவிடம் கேட்டேன்.

கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார். கார்த்திகாவுக்கும், அபினேஷ்க்கும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நேற்று நான் பைசனில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரர் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது.