சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வேலூர் மாவட்டம், காட்பாடியில் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான காரை சென்னையில் வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை குன்றத்தூரில் இருந்து பெரும்புதூர் வரை செல்வதற்காக மோகன் (23) என்பவர் பிரபுவின் வாடகை காரை ஆன்லைனில் புக் செய்துள்ளார். அதன்பேரில், பிரபு காரை எடுத்துக் கொண்டு குன்றத்தூரில் இருந்து பெரும்புதூருக்கு மோகனை அழைத்து சென்றுள்ளார். பின்னர், பெரும்புதூர் சென்றதும் மோகனை இறக்கி விட்ட பிரபு வாடகை பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பிரபு தன்னிடம் பணம் இல்லை சிறிது நேரத்தில் நண்பரை எடுத்து வர சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பிரபு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, மோகன் செல்போனில் சார்ஜ் இல்லை எனக்கூறி காரினை ஆன் செய்து விட்டு போகுமாறு கூறியுள்ளார். பிரபுவும் காரை ஆன் செய்துவிட்டு சென்றுள்ளார்.
அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மோகன் காரை அபேஸ் செய்து கொண்டு வேலூர் நோக்கி தப்பிச்சென்றுள்ளார். இதனால் செய்வதறியாமால் திகைத்து நின்ற பிரபு பின்னர் பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்டத்தில் உள்ள டிராவல்ஸ் வாட்ஸ் அப் குரூப்களில் இதுபற்றிய தகவலை பதிவிட்டுள்ளனர். இதற்கிடையில், அந்த கார் வாலாஜா மற்றும் பள்ளிகொண்டா சுங்கசாவடிகளை கடந்ததும் பாஸ்ட் டேக்கில் இருந்து பிரபுவிற்கு குறுந்தகவல் சென்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கார் பள்ளிகொண்டா டோல்கேட் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டீசல் தீர்ந்து விட்டதால் நின்றுள்ளது.
அப்போது, அந்த வழியாக சென்ற பள்ளிகொண்டாவை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர்கள் சிலர் காணாமல் போன கார் என கண்டுபிடித்து மோகனை கையும் களவுமாக பிடித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், மோகன் கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார் பாளையம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் என்பதும், குன்றத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து மோகனை கைது செய்தனர். மேலும், காரை பறிமுதல் செய்து சென்றனர்.