இளைஞர்கள் போராட்டம் அடங்கிய நிலையில் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: காத்மாண்டு விமான நிலையம் மீண்டும் திறப்பு; பாதுகாப்பு பணிகளை தொடங்கியது ராணுவம்
காத்மாண்டு: பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் ராஜினாமாவைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் அடங்கிய நிலையில் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது. காத்மாண்டு விமான நிலையம் நேற்று மாலையிலிருந்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. வன்முறை நடக்காமல் தடுக்க இன்று காலை வரை ஊடரங்கு உத்தரவை அமல்படுத்தி உள்நாட்டு பாதுகாப்பு பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக ஜென் இசட் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கடந்த திங்கட்கிழமை போராட்டத்தை தொடங்கினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போராட்டம் கடும் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் உட்பட பெரும்பாலான அரசு கட்டிடங்களை போராட்ட இளைஞர்கள் தீ வைத்து எரித்தனர். அதிபர், முன்னாள் அதிபர்கள், பிரதமர், அமைச்சர்கள் என முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அமைச்சர்களை போராட்டக்காரர்கள் தெருவில் ஓட ஓட விரட்டி அடித்தனர். நிலைமை கைமீறிப் போனதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் ராஜினாமா செய்தனர். இந்த போராட்டத்தால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
2 நாள் வன்முறையால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை நேற்று முன்தினம் இரவு முதல் ராணுவம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், நாடு தழுவிய ஊடரங்கு மற்றும் கட்டுப்பாட்டு உத்தரவுகளை ராணுவம் நேற்று பிறப்பித்தது. போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. தெருக்கள், முக்கிய சாலைகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்று வன்முறை சம்பவங்கள் அடங்கின.
மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு ராணுவம் அறிவுறுத்தியதால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அத்தியாவசிய பொருட்களை ஒருசிலர் மட்டும் சாலைகளில் சென்றபடி இருந்தனர். தெருக்கள், சாலைகளில் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்கள் எலும்புக் கூடாக கிடந்தன.
பல அரசு கட்டிடங்கள் தீயில் கருகி காட்சி அளிக்கின்றன. ஓட்டல்கள் பலவும் எரிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 5 மணியுடன் ராணுவத்தின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் முடிவடைந்த நிலையில், புதிதாக போராட்டம் எதுவும் நடக்காததால் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது. இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதற்கிடையே, வன்முறை காரணமாக நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினர் நாடு திரும்ப வசதியாக 24 மணி நேரத்திற்குப் பிறகு, நேற்று மாலை 6 மணிக்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
பயணிகள் விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. இந்த அசாதாரண சூழலில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினர் மீட்பு மற்றும் வேறு பிற உதவிகளுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு முகாம்களையோ, பணியாளர்களையோ தொடர்பு கொள்ளலாம் என்றும், தேவைப்படும் வெளிநாட்டவர்களுக்கு ஓட்டல்கள், சுற்றுலா தொழில்முனைவோர் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தேவையான உதவிகளை வழங்க வேண்டுமமெனவும் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் 2 நாட்களாக தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
* 7000 கைதிகள் தப்பி ஓட்டம்
அரசுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டத்தை பயன்படுத்தி நேபாளத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் இருந்து 7,000 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறார் சிறைச்சாலையில் பாதுகாப்பு வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 5 சிறுவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறார் சிறைச்சாலையில் இருந்து சுமார் 200 பேர் தப்பிச் சென்றதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
* கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கி, ஆயுதங்கள்
போராட்டத்தின் போது பல கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து போலீசாரின் துப்பாக்கிகள், ஆயுதங்களையும் சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆயுதங்களை திருப்பி ஒப்படைக்க ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
* சோனாகச்சி பாலியல் பெண்கள் கவலை
கொல்கத்தாவின் சோனாகச்சி ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு மாவட்டமாக புகழ்பெற்றது. இங்குள்ள பெரும்பாலான பாலியல் தொழில் செய்யும் பெண்கள் நேபாளத்தை சேர்ந்தவர்கள். நேபாளத்தில் பெரும் போராட்டத்தை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள தங்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
* இடைக்கால பிரதமர் சுசிலா கார்க்கி?
நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியை ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜென் இசட் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி, ஊழலை சகித்துக்கொள்ளாத மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர். அவர் நேபாள இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சுசிலா கார்க்கி இந்தியாவில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
* இது ஆரோக்கியமான அறிகுறி அல்ல: நிபுணர்
இந்தியாவின் ஓய்வு பெற்ற மூத்த தூதர் வேணு ராஜாமோனி அளித்த பேட்டியில், ‘‘நேபாளத்தில் நடப்பது அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல, கவலையளிக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் தொடர்ச்சியாக உறுதியற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இலங்கை, வங்கதேசத்தை தொடர்ந்து வன்முறை சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ளது. இது ஆட்சிகள் சரிவதற்கும் அவற்றின் தலைவர்கள் தப்பி ஓடுவதற்கும் வழிவகுத்தன. இது ஆரோக்கியமான அறிகுறி அல்ல. இதை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மியான்மர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என ஒட்டுமொத்த அண்டை நாடுகளின் நிலை சீராக இல்லை’’ என்றார்.
* உயிரை கையில் பிடித்தபடி தவித்தோம் சென்னை பெண் பேட்டி
பெங்களூருவில் வேலை பார்க்கும் சென்னையை சேர்ந்த கவுரி என்பவர் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்று, இந்தியா திரும்பும் வழியில் காத்மாண்டுவில் சிக்கி உள்ளார். அவருடன் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒரே ஓட்டலில் தங்கியிருப்பதாக அவர் கூறி உள்ளார். கவுரி அளித்த பேட்டியில், ‘‘ ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கையில் ஆயுதங்களுடன் சுற்றி வந்தனர். சுற்றுலா பயணிகளை கூட விட்டு வைக்கவில்லை. நாங்கள் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டலில் தங்கியிருந்தோம்.’’ என்றார்.