Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்...!

மதுரை: இளைஞர்களுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு இளைஞர்கள் வாய்ப்புகளை பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அது தொடர்பான பல பிரச்சினைகளையும் எழுப்பி வந்துள்ளேன். தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு தர மறுப்பது, தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களை வெகு தூரத்தில் தேர்வுகளுக்கு துரத்துவது, இந்தி மொழியை தேர்வு முறைமையில் திணிப்பது, இட ஒதுக்கீடு அமலாவதில் அநீதி இழைக்கப்படுவது என தொடர்ந்து நான் எழுப்பிய பிரச்சினைகளில் தீர்வுகளையும் காண முடிந்தது.

ஆனாலும் ஒன்றிய அரசு எல்லாவற்றையும் மையப்படுத்துவது என்ற பெயரில் மாநில உரிமைகள், தமிழ்நாடு இளைஞர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதை விடவில்லை. முந்தைய காலங்களில் மண்டல வாரியான பணி நியமன தேர்வுகள் இருந்தன. அப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு இளைஞர்கள் நிறைய வேலைவாய்ப்பை பெற்றனர். அதனால் தமிழ்நாட்டு மக்களும் பயன் பெற்றனர். தாய் மொழி அறிந்தவர்கள் அதிகமாக உள்ள அலுவலக சூழல், எளிய மக்கள் சேவை பெற உகந்த இடங்களாக அரசு அலுவலகங்களை வைத்திருந்தது.

இப்போதோ ஒரு தேசம், ஒரு தேர்வு என்ற முறையில் ஒன்றிய அரசின் பணிகளுக்கு தேசம் முழுமைக்குமான தேர்வு முறைமையை அமலாக்குகிறது. “பணி நியமனத் தேர்வு பயிற்சி" பெரும் தொழிலாக மாறி விட்டது. "நீட்" மோசடியில் எவ்வாறு தேர்வுகள் நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்டன என்பதை நாடு தற்போது அறிந்துள்ளது. முறை சார்ந்த கல்வியைக் கூட ஒதுக்கி விட்டு பயிற்சி மையங்களை நோக்கி மாணவர்கள், இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அலுவலகங்களில் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறுவதும் குறைந்து விட்டது. ஆகவே மீண்டும் மண்டல அளவிலான தேர்வுகளை நான் வலியுறுத்தி வருகிறேன்.

இந்த நிலையில் இரண்டு தேர்வுகளுக்கு மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஒன்று Combined Graduate level தேர்வு. எதிர்வரும் ஜூலை 24 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி. இன்னும் 7 நாட்கள்தான் உள்ளன. வருமானவரி, கலால், கணக்காயர் போன்ற துறைகளில் பணி நியமனங்கள் பெற முடியும். இன்னொன்று Multi Tasking staff. இதற்கு + 2 கல்வித் தகுதி போதுமானது. எதிர்வரும் ஜூலை 31 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி. இன்னும் 14 நாட்கள்தான் உள்ளன.

ஒரு பக்கம் மண்டல மட்ட தேர்வுகள் என்று நாம் கோரிக்கை வைத்தாலும், இன்னொரு பக்கம் அகில இந்திய மட்ட தேர்வுகளில் நாம் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருக்க கூடாது. ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிப்பது மிக குறைவாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே என்னுடைய வேண்டுகோள்! அன்பிற்குரிய தமிழ்நாட்டு இளைஞர்களே நீங்கள் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள். தரமான நிலையான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ள காலம். அரசு வேலைகள் பணிப் பாதுகாப்புடன் கூடியது. மக்களுக்கும் சேவை புரியும் வாய்ப்புடையது. ஆகவே உடனே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பியுங்கள். வெல்லுங்கள். உங்களால் தமிழ்நாடு அலுவலகங்கள் மக்களின் நண்பர்களாக மாற முன் வாருங்கள். வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.