Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இளைஞர்கள், ராணுவம் இணைந்து போராட்டம் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி வெளிநாடு தப்பியோட்டம்: நாடாளுமன்றத்தை கலைத்து அதிரடி

அண்டனானரிவோ: ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அண்டனானரிவோவில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து இளம் தலைமுறையினரால் போராட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்த போராட்டங்கள் சில நாட்களிலேயே நாடு தழுவிய அளவில் விரிவடைந்து, ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

இந்த சூழலில், கடந்த 2009ஆம் ஆண்டு ரஜோலினா ஆட்சிக்கு வர உதவிய ‘கேப்சாட்’ என்றழைக்கப்படும் நாட்டின் உயரடுக்கு ராணுவப் பிரிவு, கடந்த 11ம் தேதி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் ஆதரவை இழந்த நிலையில், அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா பிரான்ஸ் நாட்டு ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் வாயிலாக உரையாற்றிய ரஜோலினா, ‘நான் பதவி விலகவில்லை; பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளேன்’ என்று அந்த உரையில் குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற கீழ் அவையை கலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

* ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா வெளிநாடு தப்பி ஓடிவிட்டதாலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாலும் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதை தேசிய வானொலியில் ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில்,’நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டோம். அனைத்து அரசு நிறுவனங்களையும் ராணுவம் கலைத்து வருகிறது’ என்றார்.