ராஜபாளையம்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 26 பவுன் நகையை பறித்த வாலிபரை ராஜபாளையம் போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த 19 வயது மாணவி சிவகாசி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தை சேர்ந்த ரவி மகன் லிவின் (25) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். நாளடைவில் மாணவியை லிவின் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறி, மாணவியிடம் இருந்து 26 பவுன் நகைகளை வாங்கியுள்ளார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து மேலும் ரூ.50 ஆயிரம் தேவைப்படுவதாக லிவின் கேட்டுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மாணவி, ராஜபாளையத்திற்கு நேரில் வந்தால் தருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் மாணவி தகவல் தெரிவித்தார். இதையடுத்து வில்வின் வருவதாக கூறிய நாளில் போலீசாருடன் மாணவி காத்திருந்தார். ராஜபாளையம் வந்த லிவின், போலீசாருடன் மாணவி இருப்பதைப் பார்த்து, மீண்டும் அவரது ஊருக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் கர்நாடகா மாநிலம் சென்று அவரை பிடித்து ராஜபாளையம் அழைத்து வந்தனர். அவரிடம் இருந்த 21 பவுன் நகையை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, லிவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.