ஆம்பூர்: காதலியின் ஆபாச புகைபடங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் 25 வயதுள்ள இளம்பெண். இவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் அடுத்த அகரம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (23), மருத்துவமனை ஊழியர். அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்த இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடையில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலை கைவிட்ட இளம்பெண், அசோக்கின் சந்திப்பையும் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் அசோக் பலமுறை தொடர்பு கொண்டும் இளம்பெண் அவருக்கு பதிலளிக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அசோக், இளம்பெண்ணிடம் நாம் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த ஆபாச போட்டோக்கள் என்னிடம் உள்ளது. அவற்றை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் இதை இளம்பெண் கண்டுகொள்ளவில்லையாம். இதையடுத்து அசோக் தான் தெரிவித்தபடி இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினாராம். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் இளம்பெண் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.