புது பைக்குக்கு பூஜை போட்டு திரும்பிய போது சோகம்; தவறி விழுந்து வாலிபர் பலி: அதிர்ச்சியில் நண்பன் தற்கொலை
தாராபுரம்: புதிதாக வாங்கிய பைக்கில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார். அதிர்ச்சியில் உடன் பயணித்த அவரது நண்பர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த மணக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலித் தொழிலாளி. இவரது மகன் வீரக்குமார் (18).கல்லூரியில் ஐ.டி படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த தனசேகர் (18). இவரும் அதே கல்லூரியில் ஐடி படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் புதிதாக பைக் வாங்கிய வீரக்குமார், நண்பன் தனசேகருடன் தாராபுரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று பூஜை போட்டு விட்டு மீண்டும் பைக்கில் இருவரும் மணக்கடவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 7 மணியளவில் தாராபுரம்- பழனி சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார், இவர்களது பைக்கில் மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் வீரக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனசேகர் காயங்கள் இன்றி உயிர்தப்பினர். அக்கம்பக்கத்தினர் வீரக்குமாரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் நண்பர் வீரக்குமார் பலியான சம்பவம் அறிந்த தனசேகர், தனது வீட்டுற்கு சென்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.