நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லிக்குப்பம் காவல் நிலைய வளாகத்தில் செயல்படும் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் தலைமை காவலர்கள் குமரேசன், நாகராஜ் ஆகியோர் கண்டரக்கோட்டை அடுத்த மேல் குமாரமங்கலம் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வந்த பைக்கை விசாரணைக்காக நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற பைக்கை போலீசார் துரத்திச் சென்று பிடித்து விசாரணை செய்தனர்.
பைக்கில் வந்த வாலிபர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் பைக்கை சோதனை செய்தனர். அப்போது பைக்கில் இருந்த சாக்கு பையில் 2 அட்டை பெட்டிகள் இருந்ததும், அதில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் 180 மில்லி கொண்ட 100 மது பாட்டில்கள் விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
விசாரணையில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஆரியபாளையம் மணக்குள நகர் 4வது குறுக்குத் தெருவை சேர்ந்த செந்தில் மகன் சிரஞ்சீவி (23) என தெரிய வந்தது. இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.