கோவை: கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (20). இவர் தவெகவில் இருந்து விலகி 3 மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு: தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக இணைந்து மக்கள் பணி செய்து வந்தேன். சமூக வலைதளங்களிலும் கட்சியின் கொள்கைகளை பரப்பி வந்தேன். அதன்பிறகு, கொள்கை வேறுபாடு, மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததால், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து பணிகளை செய்து வருகிறேன்.
கடந்த 3 மாதமாக, தவெக தொண்டர்கள் என்னைப்பற்றி அவதூறாகவும், ஆபாச வார்த்தைகளாலும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும், என்னுடைய புகைப்படங்களை மிக மோசமாக சித்தரித்து மீம்ஸ், வீடியோவாக பரப்பி வருகின்றனர். எனவே, என்னைப்பற்றி அவதூறாக கருத்து பதிவிடும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதுகுறித்து வைஷ்ணவி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘என்னை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாக தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அக்கட்சி தலைவர் விஜய் கண்டிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கண்டிக்கவில்லை. எனவே விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.