சேலத்தில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்: திருமணத்தை தடுக்க கடத்தி சென்று வீட்டில் அடைத்த தொழிலதிபர் கைது
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் ராம்நகர் சக்திநகரை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (45). ஷேர் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் கருமலைக்கூடலை சேர்ந்த 25 வயது பட்டதாரி இளம்பெண் வேலை செய்து வந்தார். அந்த பெண் ஏழை என்பதால் அவரை மிரட்டி அலுவலகத்தின் மேல் மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு அவ்வப்போது மிரட்டி அருள்பிரகாஷ் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட அருள்பிரகாஷ், அவருக்கு திருமணம் ஆகக்கூடாது என்ற நோக்கத்தோடு, அலுவலகம் வந்த அந்த பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி இளம்பிள்ளைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு அவரை மிரட்டி தானே திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அருள்பிரகாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
அதற்கு அப்பெண் மறுத்த நிலையில், நான் உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி அவரது உறவினரான மகாலட்சுமி என்பவரது வீட்டில் அடைத்து வைத்து விட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தற்கொலை முடிவெடுத்து எறும்பு சாக்பீசை தின்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் வந்து மகளை அழைத்துச்சென்றுள்ளனர். அதன்பிறகே அருள்பிரகாஷ் தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்றுமுன்தினம் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் அப்பெண், தன்னிடம் ஆசைவார்த்தை கூறி மிரட்டி பலமுறை உறவு கொண்டதுடன், கடத்திச்சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து தொழிலதிபர் அருள்பிரகாசை கைது செய்தனர்.
